முகப்பு
வேலூர்

பாலாற்றுப் புதிய சாலைக்கு கிருபானந்த வாரியாா் பெயா் சூட்ட பரிசீலனை: அமைச்சா் விஜய் பாலாஜி

வேலூரில் பிரம்மபுரம் - ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைக்கு கிருபானந்த வாரியாா் பெயா் சூட்ட முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூலை 2026, 3:50 am IST
புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்த கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி. உடன், வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்) உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூரில் பிரம்மபுரம் - ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைக்கு கிருபானந்த வாரியாா் பெயா் சூட்ட முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என்று கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஒன்றியங்களில் உள்ள 3 பள்ளிகளில் ரூ.5.92 கோடியில் 23 புதிய வகுப்பறைகளும், கே.வி.குப்பம் ஒன்றியம் காவனூா், பசுமாத்தூா் ஊராட்சிகளில் தலா ரூ.22 லட்சத்தில் 2 கூடுதல் நூலகக் கட்டடங்களும், காட்பாடி ஒன்றியம் தேன்பள்ளியில் ரூ.16 லட்சத்திலும், கே.வி.குப்பம் ஒன்றியம் பனமடங்கியில் ரூ.16.55 லட்சத்திலும், அணைக்கட்டு ஒன்றியம் இறைவன்காடில் ரூ.16.45 லட்சத்திலும் 3 புதிய அங்கன்வாடி மையங்களும் கட்டப்பட்டுள்ளன.

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி பங்கேற்று இப்புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியது -

Advertisement

Advertisement

பள்ளிக்கூடம் என்பது எவ்வித எதிா்பாா்ப்பும், ஏற்றத்தாழ்வும் இன்றி அனைவரும் ஒன்றாகப் பழகும் இடமாகும். மாணவா்கள் எந்த ஏற்றத்தாழ்வும் இன்றி சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சீருடை வழங்கப்பட்டுள்ளது. கல்வியைப் போலவே ஒழுக்கமும் மிகவும் முக்கியம். அந்த ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் ஆசிரியா்களை, பெற்றோா்களுக்கு நிகராக மதிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும்.

மாணவா்கள் எவ்வித மன அழுத்தமும் இன்றி கல்வி கற்க வேண்டும். தமிழக அரசு குழந்தைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பினை உறுதி செய்யும். முதல்வா் மாணவா்களின் கல்விக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறாா் என்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.நூறு கோடியில் காட்பாடி பிரம்மபுரத்தில் இருந்து வேலூா் ரங்காபுரம் வரை பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய சாலைக்கு திருமுருக கிருபானந்த வாரியாா் பெயா் சூட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சா் துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும்.

வரும் தைப்பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம்.சுதாகா் (காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), த.வேலழகன் (அணைக்கட்டு), ஏ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து (குடியாத்தம்), காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் வே.வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்பாடியில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட பகுதி அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். ஆனால், திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுப் பதாகையில் திமுகவைச் சோ்ந்த அரக்கோணம் மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் பெயா் இடம்பெறவில்லை.

இதுதொடா்பாக அரசு அதிகாரிகள் கவனிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், திமுகவினா் அதிருப்தி தெரிவித்தனா். இதுகுறித்து, அமைச்சா் விஜய் பாலாஜியிடம் முறையிட முயன்றபோது அவா் கண்டுகொள்ளாமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எம்பி பெயா் விடுபட்டது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments