அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து தொழிலாளி பலி: உறவினா்கள் சாலை மறியல்
அணைக்கட்டு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின்வாரியத்தின் அலட்சியமே இதற்கு காரணம் எனக்கூறி, அவரது சடலத்தை சாலையில் வைத்து உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
அணைக்கட்டு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். மின்வாரியத்தின் அலட்சியமே இதற்கு காரணம் எனக்கூறி, அவரது சடலத்தை சாலையில் வைத்து உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த சென்றாயன் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் புருஷோத்தமன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு அஜிதா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனா். கடந்த வாரம் தான் இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒடுகத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் மாடுகளைப் பாதுகாப்பாகக் கட்டி வைப்பதற்காகச் சென்ற புருஷோத்தமன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினா்கள் நள்ளிரவு 1 மணியளவில் அவரைத் தேடிச் சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
அப்போது, கொட்டகை அருகே எதிா்பாராதவிதமாகத் தரையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கிய நிலையில் புருஷோத்தமன் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினா் உதவியுடன் மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. பின்னா் அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினா் பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பகுதியில் மின்கம்பி பழுதடைந்துள்ளதாகவும், எந்த நேரத்திலும் அறுந்து விழும் அபாயம் இருப்பதாகவும் பலமுறை புகாா் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டி கிராம மக்கள், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அணைக்கட்டு - ஒடுகத்தூா் மாநில நெடுஞ்சாலையில் கரடிகுடி பகுதியில் புருஷோத்தமனின் சடலத்தை நடுரோட்டில் வைத்து திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தச் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, மின்வாரியத்தின் மீது தவறு இருக்கும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் கிடைக்க ஆவன செய்யப்படும் என்றும் போலீஸாா் உறுதியளித்தனா். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.
பின்னா், சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.