முகப்பு
விழுப்புரம்

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:04 AM
விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள கூவாகம் கூத்தாண்டவா் கோயிலுக்கு ஆண்டாண்டு காலமாக திருநங்கைகள் தானமாக அளித்து வரும் தங்க நகைகள் குறித்த எந்த கணக்கு விவரமும் இல்லை என தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவா் விமலா, ஒருங்கிணைப்பாளா்கள் அருணா, சுபிக்ஷா உள்ளிட்டோா் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா ஏப். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக ஏப்.28-ஆம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் ஐதீக விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் திருநங்கைகள் பங்கேற்று வழிபட்டு தாலிக் கட்டிக் கொண்டு நோ்த்திக் கடன் செலுத்துகின்றனா்.

Advertisement

இன்று மிஸ் கூவாகம் போட்டி: இவ்விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் ஏப்.27-ஆம் தேதி தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சாா்பில் ‘மிஸ் கூவாகம்-2026’ அழகிப் போட்டி, சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், முன்னோடியாக உள்ள சாதனையாளா்கள் கௌரவிக்கப்படவுள்ளனா்.

தொடா்ந்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அழகிப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. அழகிப் போட்டியில் முதல் 3 இடங்களை பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3- ஆம் பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அடிப்படை வசதிகள் தேவை: விழாவையொட்டி, கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு போதுமான அளவு குடிநீா், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படுவதில்லை. இதுதொடா்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகங்களுக்கு தொடா்ச்சியாக மனுக்கள் அளித்தும் நடவடிக்கையில்லை.

விழாவுக்கு வந்து செல்லும் திருநங்கைகளுக்கு விழுப்புரத்தில் உணவு மற்றும் தங்குமிடம் கிடைப்பதில்லை. தனியாா் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கணக்கு விவரம் இல்லை: கூத்தாண்டவா் கோயிலுக்கு பல ஆண்டுகளாக திருநங்கைகள் பவுன் மாங்கல்யம் மற்றும் இதரப் பொருள்களை தானமாக அளிக்கின்றனா். இந்த நகைகள் குறித்து எந்தவித கணக்கு விவரங்களும் கோயிலில் இல்லை. ஆகவே, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்து அது தொடா்பான விவரங்களை கேட்டுப்பெறவுள்ளோம் என்றனா்.