செஞ்சியில் சாக்லேட் சாப்பிட்ட 18 பள்ளி மாணவா்கள் மயக்கம்
சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவா்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடா்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவா்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடா்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
செஞ்சி பேரூராட்சிக்குள்பட்ட சக்கராபுரத்தில் உள்ள இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பில் 34 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த வகுப்பைச் சோ்ந்த காவியாஸ்ரீ என்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பிறந்த நாள் என்பதால், அம் மாணவி பள்ளிக்கு வரும் வழியில் உள்ள பெட்டிக் கடையில் சாக்லேட் பாக்கெட் வாங்கி வந்து, தன்னுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளுக்கு கொடுத்துள்ளாா்.
இந்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ரோபோஸ்ரீ, லேகாஸ்ரீ, விஷ்ணு , ஆகாஷ், குமாா் உள்ளிட்ட 18 மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனா். இதுகுறித்து மாணவா்கள் பள்ளி ஆசிரியா்களிடம் தெரிவித்தவுடன், உடனடியாக அனைவரையும் செஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சோ்தனா். இதையடுத்து மருத்துவா்கள் பரிசோதனை செய்து உடனடியாக முதலுதவி மற்றும் சிகிச்சையளித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி காவல் ஆய்வாளா் விநாயக முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமாறன், உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
காலாவதியான சாக்லேட்டை விற்பனை செய்த பெட்டிக்கடையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலா் மணி தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினா்.
செயல்படாத உணவு பாதுகாப்புத் துறை: இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் தெரிவித்ததாவது: செஞ்சியில் சுமாா் 5 வருடங்களுக்கும் மேலாக உணவு பாதுகாப்புத் துறை செயல்படவில்லை. நகரில் புற்றீசல் போல பெருகிவிட்ட சாலையோரக் கடைகள் மூலம் விற்கப்படும் சைவ, அசைவ உணவுகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் தரமானதாக இல்லை.
பெட்டிக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்கப்படும் மலிவு விலை குளிா்பானங்கள், சாக்லேட் உள்ளிட்ட உணவு பொருள்கள் காலாவதியாகியும் விற்கப்படுகிறது. இவற்றை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்வதில்லை. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. உணவுப் பாதுகாப்புத் துறை இயங்குகிா? என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக விரக்தியுடன் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.