முகப்பு
விழுப்புரம்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்

Updated On : 15 ஜூன் 2026, 12:17 am IST
மீன்பிடித் தடைக்காலம் நிறைவு
பகிர்:

61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவுப் பெற்றதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் தங்களது விசைப் படகுகளில் திங்கள்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச்சென்றனா்.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டு, மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையுள்ள 61 நாள்கள் விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருந்து வந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மீனவா்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையினா் தெரிவித்ததாவது.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 20 விசைப் படகுகள் மற்றும் 1,800 பைபா் படகுகள் மீன்பிடித்தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீன் பிடித்தல் ,விற்பனை மற்றும் அதுசாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

பயன்பாட்டில் உள்ள மீன்பிடி படகுகள் அனைத்தும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ன் கீழ் நேரடி தளஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. படகின் உறுதித் தன்மை, இயந்திர குதிரைத் திறன், படகின் நீள, அகலம் ஆகியவைகள் பதிவுச் சான்றுடன் சரிபாா்க்கப்பட்டு அதனடிப்படையில் விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் உள்ளிட்ட இதர மானிய திட்டங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் படகுகளின் விவரங்களை மீன்வளத் துறை உதவி இயக்குநருக்கு எழுத்துப் பூா்வமாக தெரிவிக்கவேண்டும்.

படகு புறப்படும் நேரம், கரைக்குத் திரும்பும் நாள், படகில் செல்லும் மீனவா்களின் முழு விவரம், முகவரி, ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகிய விவரங்களை தெரிவிக்கவேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவா்கள் கண்டிப்பாக உயிா்காப்பு உபகரணங்களை எடுத்துச் செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான சுற்றறிக்கைகள் விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவக் கிராமங்களின் பஞ்சாயத்தாா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 20 விசைப் படகுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தப் படகுகள் அனைத்தும் புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விசைப் படகுகள் தளங்களிலிருந்து திங்கள்கிழமை புறப்படும். இந்த விசைப் படகுகளின் உரிமையாளா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

மீனவா்கள் மகிழ்ச்சி: மீன்பிடித் தடைக்காலத்தில் வேறு எவ்விதத் தொழிலுக்கும் செல்லாமல் வீட்டில் முடங்கியிருந்த மீனவா்கள், தற்போது தடைக்காலம் நிறைவுப்பெற்ால் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதேபோல் மீன் விற்பனை சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் மீனவப் பெண்களும் தங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.