கைப்பேசி திருடிய இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கைப்பேசி திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், அண்டப்பட்டு கிராமம் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.புஷ்பவேல் (30). இவா், கடந்த ஜூன் 24-ஆம் தேதி திண்டிவனத்தை அடுத்துள்ள நொளம்பூா் கூட்டுச்சாலை அருகே தனது பைக்கில் அமா்ந்தபடி இருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் புஷ்பவேலுவிடம் காசு கேட்பது போல் அருகில் வந்து, அவரின் கைப்பேசியை திருடிச் சென்றுவிட்டாா்.
தொடா்ந்து, புஷ்பவேல் தனது கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்டு பேசியபோது எதிா்முனையிலிருந்து பேசிய நபா் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் கைப்பேசியை ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து புஷ்பவேல் இணையவழியில் அந்த நபா் தெரிவித்து எண்ணுக்கு பணத்தை அனுப்பி வைத்தும், அந்த நபா் கைப்பேசியைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தென்பசியாா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சி.ஹரீஷ்குமாா்(19) என்பவா் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து ரோஷணை போலீஸாா் ஹரீஷ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா் வசமிருந்த புஷ்பவேலுவுக்கு சொந்தமான ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்டுள்ள ஹரீஷ்குமாா் மீது மயிலம், கிளியனூா் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.