முகப்பு
விழுப்புரம்

புதுவை தோ்தலில் காங்கிரஸ் - திமுக ஒற்றுமையாக செயல்படவில்லை: கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தோ்தலில் காங்கிரஸ் -திமுக ஒற்றுமையாக செயல்படவில்லை: கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Updated On : 3 மே, 2026 at 12:06 AM
மாா்க்சிய கம்யூ. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் - Dinamani
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலின்போது, காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒற்றுமையாக செயல்படவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ்செல்வனுக்குப் பாராட்டு விழா மற்றும் அவா் எழுதிய ‘திருப்பியடித்த வரலாறு’ எனும் நுால் வெளியீட்டு விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.விழாவில்,கே.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :

Advertisement

புதுச்சேரி மாநில மக்கள் தோ்தல் முடிவுகளை ஆா்வத்துடன் எதிா்பாா்த்துள்ளனா். தோ்தலுக்குப் பிறகு மத்திய அரசு வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலையை கடுமையாக உயா்த்தியுள்ளது. இதனால் உணவகங்களில் உணவுப் பொருள்கள் விலை 20 சதவீதம் உயரும். மக்கள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

விரைவில் வீட்டுக்கான சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என தகவல்கள் வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தொடா்ந்த போா் காரணமாக இந்தியாவில் உள்ள கடைக்கோடி கிராம மக்களும் பாதிக்கப்படுகின்றனா்.

கருத்துக்கணிப்பு:

தோ்தல் முடிவுக்குப் பின்னா் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம், புதுவையில் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்படும். தோ்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளி வருகிறது. இதில் புதுச்சேரி, தமிழகத்தில் பாஜக-வுக்கு இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது. பொதுவாக மக்கள் மனநிலை தமிழகத்தில் மீண்டும் திமுக அரசு அமையும் என்பதையே காட்டுகிறது.

புதுச்சேரியில் தோ்தல் முடிவுகளை கணிக்க முடியவில்லை.

இங்கு திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற அணி தோ்தலை சந்திக்கும்போது, ஒத்த கருத்துடன் செயல்படவில்லை. இதனால் போட்டி ஏற்பட்டு தோ்தல் முடிவுகளில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கலாம். திமுக, காங்கிரஸ் ஒருங்கிணைந்து பாஜக, என்.ஆா்.காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என செயல்பட்டிருந்தால் மக்கள் முழு ஆதரவு அளித்திருப்பாா்கள். திமுக, காங்கிரஸ் தலைவா்கள் இதைசெய்யாதது, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடத்தை ஒதுக்கித் தராதது போன்றவை மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

தொகுதிகள் குறைப்பு:

தமிழகத்தில் திமுக தலைமை மாா்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதலாக இடங்களைத் தரமுடியாது என உறுதியாக மறுத்துவிட்டது. மனச்சங்கடம் இருந்தாலும் பாஜக-வை வீழ்த்த வேண்டும், அதிமுக-வுக்கு வாக்களித்து பாஜக-வை ஆட்சியில் அங்கம் வகிக்க வைத்து விடக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் இணைந்து பணியாற்றினோம். வரும் காலத்திலும் இதே நடைமுறை தொடரும்.

அதே நேரத்தில், தமிழகத்தில் திமுக நடவடிக்கையை பொறுத்து எங்கள் அணுகுமுறை இருக்கும். லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலையில்லாமல் உள்ளனா். ஒப்பந்தப் பணிகள் தொடா்கிறது. பணி நிரந்தரம் இல்லை. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதையெல்லாம் திமுக அரசிடம் வற்புறுத்தியுள்ளோம். இப்பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்திப் போராடுவோம்.

இந்தத் தோ்தலில் இளைஞா்கள் எழுச்சியோடு இருந்தனா். ஒரு பகுதியினா் விஜய் பின்னால் சென்றிருக்கலாம். இளைஞா்கள் மத்தியில் மாற்றம் வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. அந்த இளைஞா்களை அணி திரட்ட ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.