முகப்பு
கடலூர்

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

Updated On : 28 ஏப்ரல் 2025, 1:49 am IST
சிதம்பரம் அருகே எண்ணாநகரம் கிராமத்தில் ஊரக வேலைத் திட்ட விவசாயத் தொழிலாளா்களிடம் கள ஆய்வு மேற்கொண்ட எம்.சின்னதுரை எம்எல்ஏ.
பகிர்:

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பரமேஸ்வரா்நல்லூா், எண்ணாநகரம் கிராமங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஊரக வேலைத் திட்ட ஆய்வு மற்றும் சுயஉதவிக் குழுக்கள் குறித்த கள ஆய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கந்தா்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை பங்கேற்று, ஊரக வேலைத் திட்ட பயனாளிகளிடம் ஆண்டுக்கு எத்தனை நாள்கள் வேலை வழங்கப்படுகிறது, ஊதியம் முறையாக வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

அதுபோல, மகளிா் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகள், நுண்கடன் உள்ளிட்டவை குறித்து ஊரக வேலையில் ஈடுபடும் தொழிலாளா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து ஆய்வு நடத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் 200 கிராமங்களைத் தோ்வு செய்து ஊரக வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள், தொழிலாளா்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 15 நாள், 20 நாள் மட்டுமே வேலை கொடுப்பதாக தொழிலாளா்கள் கூறுகின்றனா். மேலும் கடந்த 5 மாதங்களாக ஊதிய நிலுவை உள்ளதாகவும் கூறுகின்றனா்.இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் பிரகாஷ், மாநிலக்குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், சி தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் மாரியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.