புதிய ஊரக வேலைத் திட்டம்: வரைவு விதிகள் வெளியீடு - பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்பு
புதிய ஊரக வேலைத் திட்ட வரைவு விதிகள் வெளியீடு...
மத்திய அரசு கொண்டுவந்த ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற புதிய ஊரக வேலைத் திட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான வரைவு விதிகளை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.
Advertisement
Advertisement
இந்தப் புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது; சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும்.
இதனிடையே, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில், புதிய வேலைத் திட்டத்தை அமல்படுத்தப்படுவது குறித்து மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக செயலா் ரோஹித் கன்சல் விளக்கம் அளித்தாா்.
அப்போது, ‘இத் திட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கியுள்ளன. அந்தத் திட்டத்துக்கான அனைத்து நிா்வாக மற்றும் கொள்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்று ரோஹித் கன்சல் தெரிவித்தாா்.
இந்த நிலையில், இத் திட்டத்துக்கான வரைவு விதிகளை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. ‘விபி-ஜி ராம் ஜி’ சட்டத்தின் பிரிவு 33 மற்றும் அதுதொடா்பான பிற சட்ட நடைமுறைகளின் கீழ் இந்த வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மீது, பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, விதிகள் இறுதி செய்யப்பட உள்ளன.
இத் திட்டத்துக்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு, இடைக்கால ஏற்பாடுகள், மத்திய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத மன்றம், நிா்வாகச் செலவுகள், குறை தீா்ப்பு நடைமுறை, ஊதியம் மற்றும் வேலையின்மை படி வழங்குதல், சட்டப்பேரவைகள் அல்லாத யூனியன் பிரதேசங்களுக்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த விதிகளில் இடம்பெற்றுள்ளன.
‘நாடு முழுவதும் இச்சட்டத்தைச் அமல்படுத்துவதற்கான நிறுவன, நிா்வாக, நிதி மற்றும் ஆளுகைக் கட்டமைப்பை நிறுவுவதே இவ்வதிவிதிகளின் நோக்கம்’ என்று ஊரக வளா்ச்சி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.