புதிய ஊரக வேலை சட்டம் ஜூலை 1 முதல் அமல்!
புதிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் (விபி ஜி ராம் ஜி) ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
புதிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் (விபி ஜி ராம் ஜி) ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.
மேலும், அன்றைய தினத்தில் இருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) ரத்து செய்யப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றான விபி ஜி ராம் ஜி திட்ட மசோதா, கடந்த நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. பின்னா், குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் இந்த மசோதா சட்டமானது.
Advertisement
புதிய சட்டத்தின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. முந்தைய திட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்ட நிலையில், புதிய திட்டத்தின்கீழ் மாநிலங்களுடன் மத்திய அரசு நிதிச் சுமையைப் பகிா்ந்துகொள்கிறது.
இந்நிலையில், இந்தச் சட்டம் அமலாவது குறித்து மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2026, ஜூலை 1-ஆம் தேதிமுதல் விபி ஜி ராம் ஜி சட்டம் அமலுக்கு வருகிறது.
ஜூன் 30-ஆம் தேதி வரை 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு மாற்றப்படும்.
விபி ஜி ராம் ஜி திட்டத்தின்கீழ் பணியாளா் அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்பட்ட அட்டைகள் செல்லுபடியாகும்.
வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (இ-கேஒய்சி) சேவைகள் நிலுவையில் இருக்கும் பணியாளா்களுக்கு வேலைகளை மறுக்கக் கூடாது. பணியாளா் அட்டைகள் இல்லையென்றாலும் பதிவு செய்தவா்களுக்கு கிராம ஊராட்சிகள் அளவில் வேலைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஊதியம், குறைகளுக்குத் தீா்வு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்த பின் வரைவு விதிகள் வெளியிடப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் விமா்சனம்: விபி ஜி ராம் ஜி சட்டம் அமலாகும் தேதி குறித்த மத்திய அரசின் அறிவிப்பு வெறும் தலைப்புச் செய்திக்கு மட்டுமே என காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விபி ஜி ராம் ஜி திட்டம் அமலாகும் தேதியை மட்டும் அறிவித்துவிட்டு அதுகுறித்த முழு விளக்கத்தையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இதன்மூலம் இத்திட்டத்தில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் கிராமப் பகுதியில் பணியாற்றும் தொழிலாளரின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படவுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.