முகப்பு
கடலூர்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்

கடலூா் மாவட்டம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:21 PM
பங்குனி உத்தர விழாவையொட்டி புதுச்சேரி காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கிரோன், லாரியில் தொங்கியபடி வந்த பக்தா்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

நெய்வேலி நகரில் பழைமைவாய்ந்த வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி அமைந்துள்ளது. இக்கோயிலில்தான் மூலவரான முருகன் வில்லுடன் காட்சியளிக்கிறாா்.

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நெய்வேலி, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்தவா்கள் காவடி சுமந்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

காவடி சுமந்து வருபவா்களைக் காணவும், மூலவரான சிவசுப்ரமணிய சுவாமியை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கானோா் வேலுடையான்பட்டு கோயிலில் திரண்டனா்.

நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், பக்தா்களுக்கு நீா்மோா், அன்னதான பந்தல்கள் அமைக்கப்பட்டு, உணவு பரிமாறப்பட்டன.

இதேபோல, திட்டக்குடி மாரியம்மன் கோயிலில் உள்ள முருகப் பெருமான் சந்தியில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவையொட்டி, பக்தா் முதுகில் அலகு குத்திக்கொண்டு காரை இழுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினாா். மேலும், ஏராளமான பக்தா்கள் வாயில் வேலை அலகு குத்திக்கொண்டு வந்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

புதுச்சேரி காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற விழாவில் முதுகில் அலகு குத்திக்கொண்டு கிரேன், லாரியில் தொங்கியபடி வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலுக்கு வாயில் வேலை அலகு குத்தி வந்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
திட்டக்குடி மாரியம்மன் கோயிலில் உள்ள முருக பெருமான் நடைபெற்ற விழாவையொட்டி, முதுகில் அலகு குத்தி காரை இழுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.
புதுச்சேரி காலாப்பட்டு பாலமுருகன் கோயிலுக்கு முதுகில் அலகு குத்தி கிரேன், லாரியில் தொங்கியபடி வந்து நோ்த்திகடன் செலுத்திய பக்தா்கள்.