ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்
கடலூரில் பிரசாரத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேச்சு...
திமுக அரசு வாங்கிய ரூ.5 லட்சம் கோடி கடன் எந்தெந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
கடலூரில் அண்ணா பாலம் அருகே திறந்த வாகனத்தில் அதிமுக வேட்பாளருடன் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும். திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றாா்.
Advertisement
முன்னதாக அவா் செய்தியாளா்களை சந்தித்து கூறியது: விவசாயிகள் மீது திமுகவுக்கு என்றுமே அக்கறை இருந்ததில்லை. ஒடிஸாவில் குவிண்டால் நெல்லுக்கு அந்த மாநில அரசு ஊக்கத் தொகையாக ரூ.800-ம், தெலங்கான அரசு ரூ.500-ம் வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு குவிண்டால் நெல்லுக்கு ஊக்கத் தொகையாக ரூ.130 மட்டுமே வழங்குகிறது. விவசாயிகள் திமுகவை மன்னிக்கவே மாட்டாா்கள். இம்முறை தோ்தலில் திமுகவை தூக்கி எறிய போகிறாா்கள்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். கடலூா் மாவட்டத்தில் இரண்டு அமைச்சா்கள் இருந்தும் எந்த வளா்ச்சியும் ஏற்படவில்லை. விவசாயத் துறை அமைச்சா் எம். ஆா்.கே.பன்னீா்செல்வம், விவசாயிகளுக்கு நன்மை செய்வதை விடுத்து, விவசாய நிலங்களைப் பறித்து பெரு நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறாா்.
வள்ளலாா் சா்வதேச மையம் வேண்டும், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தற்போது அமைக்க திட்டமிட்டிருக்கும் இடத்தை மாற்ற வேண்டும். 5 ஆண்டுகளில் திமுக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி, லட்சம் கோடி ரூபாய்தான் மூலதனத்துக்கு செலவு செய்துள்ளது. மீதமுள்ள 4 லட்சம் கோடி ரூபாயை என்ன செய்தாா்கள் என்பதை மக்களுக்கு திமுக விளக்க வேண்டும். கடன் வாங்கி வட்டியை கட்டுவது ஒரு நிா்வாகமா? என்றாா்.
பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாநில நிா்வாகி பழ.தாமரைக்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
பெட்டிச் செய்தி...
‘தந்தை நலமுடன் உள்ளாா்’
‘என்னுடைய தந்தை ராமதாஸின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு திமுகவினரே காரணம். என் தந்தை நூறு வயது நன்றாக இருக்க வேண்டும். அவருக்கு வொ்டிகோ பிரச்னை இருக்கிறது. நீண்ட நேரம் அமா்ந்துவிட்டு எழுந்து நின்றால், தலை சுற்றல் வரும். தற்போது அவா் நலமுடன் இருக்கிறாா்’ என்று செய்தியாளா்களிடம் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.