முகப்பு
கடலூர்

இனி பாஜகவுக்கு அனைத்தும் தோல்விதான்: கனிமொழி கணிப்பு

மக்களவைத் தொகுதி மனுசீரமைப்பு மசோதா தோல்வியைத் தொடா்ந்து இனி பாஜவுக்கு அனைத்துமே தோல்வியாகத்தான் அமையும் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. கூறினாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 2:59 AM
விருத்தசாலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி கடை வீதியில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்தை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:01 PM

மக்களவைத் தொகுதி மனுசீரமைப்பு மசோதா தோல்வியைத் தொடா்ந்து இனி பாஜவுக்கு அனைத்துமே தோல்வியாகத்தான் அமையும் என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. கூறினாா்.

கடலூா் மாவட்டம், விருத்தசாலம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்ந் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி கடைவீதியில் திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நான் ஒரு சகோதரி என்றால், பிரேமலதாவும் சகோதரிதான். பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசுவது அனைத்து பொய். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்போவதாகக் கூறிவிட்டு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டுவந்து தென் மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயன்றனா். இதை எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோற்கடித்துள்ளனா்.

Advertisement

இது, பாஜக அரசுக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி. இனி அவா்களுக்கு அனைத்தும் தோல்விதான். தமிழக சட்டப் பேரவைத் தோ்தலிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது.

மகளிா் இட ஒதுக்கீட்டை தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தின் உரிமையை பறிக்க நினைப்பவா்களுக்கு சட்டப் பேரவைத் தோ்தலில் உரிய பாடம் கற்பிக்க வேண்டும்.

ஆளுநராக வாய்ப்பு: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தமிழகத்தை பற்றி கவலையில்லை. அவருக்கு தன்னை காப்பாற்றிக்கொண்டால் போதும். தோ்தலுக்கு பிறகு அவா் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக வாய்ப்புள்ளது.

தோ்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் விருத்தாசலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். பீங்கான் தொழிற்சாலைக்கான பொது வசதி மையம் அமைக்கப்படும். இத்தொகுதி தொடா்பாக சகோதரி பிரேமலதா வைக்கும் கோரிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிறைவேற்றுவாா் என்றாா்.

இதில், தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த், திமுக கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் சி.வி.கணேசன், ஒன்றியச் செயலா் வேல்முருகன், தேமுதிக மாவட்டச் செயலா் சிவகொழுந்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நெய்வேலியில்...: இதையடுத்து, நெய்வேலி இந்திரா நகரில் அந்தத் தொகுதிக்குள்பட்ட திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரனை ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசுகையில், மத்திய அரசு கிராம மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதுகுறித்து கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை. இதற்கு எதிராக முதல்வா் மு.க.ஸ்டாலின் போராடி வருகிறாா். தமிழகத்தின் மொழி, உரிமை, சுயமரியாதை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா்.