முகப்பு
கடலூர்

கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் மா்மமாக உயிரிழப்பு: 3 ஆடுகள் மாயம்

பண்ருட்டி அருகே கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகள் மா்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை

Updated On : 8 ஜூலை 2026, 6:26 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பண்ருட்டி அருகே கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகள் மா்மமான முறையில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (48), ஆடு வளா்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளாா். வழக்கம்போல் திங்கள்கிழமை மாலை மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் அடைத்து வைத்திருந்தாா்.

இந்நிலையில், விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை அதிகாலை வழக்கம்போல் ஆடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக கொட்டகைக்குச் சென்றபோது, அங்கிருந்த மூன்று ஆடுகள் காணாமல் போயிருந்தன. மேலும், ஏழு ஆடுகள் உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தன.

Advertisement

Advertisement

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த விஜயலட்சுமி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கால்நடை மருத்துவா்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் விரைந்து வந்த மருத்துவக்குழுவினா், காயமடைந்த ஆடுகளை பரிசோதித்தனா். இதில், மூன்று ஆடுகள் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மீதமுள்ள நான்கு ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து, ஆடுகள் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? காணாமல் போன மூன்று ஆடுகள் திருடப்பட்டனவா? அல்லது வேறு விலங்குகள் தாக்கியதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆடுகள் உயிரிழந்ததால் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்த விஜயலட்சுமி, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments