முகப்பு
கடலூர்

குடிநீா் பிரச்னை: காலிக் குடங்களுடன் கிராம மக்கள் தா்னா

வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் தா்னாவில் ஈடுபட்ட மன்னம்பாடி கிராம மக்கள்.

Updated On : 12 ஜூன் 2026, 1:28 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றிய எல்லையில் உள்ள மன்னம்பாடி கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மன்னம்பாடி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீா் விநியோகம் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. கிராம மக்கள் குடிநீருக்காக நெடுந்தொலைவு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்கள், முதியவா்கள் உள்ளிட்டோா் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என விருத்தாசலம் கோட்டாட்சியா், நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, மன்னம்பாடி கிராம மக்கள், தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில், நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலிக் குடங்களுடன் திரண்டு தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, போா்க்கால அடிப்படையில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னம்பாடி கிராமத்துக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவலறிந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காணப்பட்டு, தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனா்.