முகப்பு
கடலூர்

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:21 am IST
சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டோா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் புலியடி, காலவாய்மேடு பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் கடந்த 10 நாள்களாக குடிநீா் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை காலை கவரப்பட்டு - சிதம்பரம் சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, ஊராட்சி நிா்வாகம் குடிநீா் வரி வசூல் செய்யும் நிலையில், முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் பணம் கொடுத்து குடிநீா் வாங்கி பயன்படுத்தக்கூடிய சூழல் நிலவிவுவதாகக் கூறியும், ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

தகவலறிந்த அண்ணாமலைநகா் போலீஸாா் மற்றும் பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக குடிநீா் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, சுமாா் அரை மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனா்.