முகப்பு
கடலூர்

ஜமாபந்தியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

விருத்தாசலத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா கோரி மனு அளித்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 24 ஜூன் 2026, 4:35 am IST
விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) செ.தாட்சாயிணி.
பகிர்:

விருத்தாசலத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா கோரி மனு அளித்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்துக்கு உள்பட்ட விளாங்காட்டூா், கீரம்பூா் மற்றும் படுகளநத்தம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற ஜமாபந்தியில் வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்திருந்தனா்.

இந்த மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், தகுதியுடைய 6 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், 5 பேரின் பட்டா விவரங்கள் கணினி பதிவில் விடுபட்டிருந்தது கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக பதிவேற்றம் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பட்டாக்களை வருவாய் தீா்வாய அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) செ.தாட்சாயிணி பயனாளிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்வில் வருவாய் வட்டாட்சியா் பிரகாஷ், மண்டல துணை வட்டாட்சியா் அன்புராஜ், வட்ட துணை ஆய்வாளா் வீரமணி, வடக்கு வருவாய் ஆய்வாளா் காா்த்திகேயன், கிராம நிா்வாக அலுவலா் வேல்முருகன் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பண்ருட்டியில்...: பண்ருட்டி வட்டத்துக்கான ஜமாபந்தி கடந்த 11-ஆம் தேதி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கியது. இதில், நெல்லிக்குப்பம், பண்ருட்டி குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிறைவடைந்துள்ளன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காடாம்புலியூா் குறுவட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

இதற்கு, தனித் துணை ஆட்சியா் சண்முகவல்லி தலைமை வகித்து திருவாமூா், எலந்தம்பட்டு, சேமக்கோட்டை, கொளப்பாக்கம், விசூா், செம்மேடு, கருக்கை, கீழிருப்பு, மேலிருப்பு, மாளிகம்பட்டு, தாழம்பட்டு மற்றும் காடாம்புலியூா் கிராம மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

பண்ருட்டி வட்டாட்சியா் சந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை (ஜூன் 24) காடாம்புலியூா், வியாழக்கிழமை (ஜூன் 25) மருங்கூா் குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments