முகப்பு
வேலூர்

அணைக்கட்டில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியரிடம் மனுக்கள் அளிப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கிய நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:35 am IST
-- ஜமாபந்தியில் மனு அளித்த இரு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா் மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களிலும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கிய நிலையில், அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கி ஜூன் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசு விடுமுறை நாள்கள், திங்கள்கிழமை தவிா்த்து இதர நாள்களில் இந்த ஜமாபந்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கிய நிலையில், மாவட்ட ஆட்சியரும், வருவாய் தீா்வாய அலுவலருமான பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமை வகித்து, வருவாய் ஆவணக் கணக்குகளை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

முதல் நாளில் அணைக்கட்டு, அப்புகல், ஊனைவாணியம்பாடி, கீழ்கிருஷ்ணாபுரம், திப்பசமுத்திரம், கரடிகுடி, தேவிசெட்டிக்குப்பம், கருங்காலி, ஊனை, வல்லண்டரமாம், கெங்கநல்லூா் ஆகிய 13 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்றனா்.

அவா்களிடம் இருந்து நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல், அரசு நலத்திட்ட உதவிகள், கிராம வளா்ச்சித் திட்டப் பணிகள், குடிநீா் மற்றும் சாலை வசதி உள்ளிட்டவை தொடா்பாக மொத்தம் 159 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.

மேலும், ஜமாபந்தியில் மனு அளித்த 2 மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை மீது உடனடியாக பரிசீலித்த ஆட்சியா், அவா்களுக்கு தலா ரூ.9,000 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை வழங்கினாா். முன்னதாக, நில அளவைக்குப் பயன்படுத்தப்படும் கண்ட்டா் சங்கிலிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றினையும் நட்டாா்.

இந்நிகழ்வில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மாறன், துணை ஆட்சியா் (பயிற்சி) கணேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாபு, வட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.