முகப்பு
கடலூர்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் ஆட்சியா் அறையில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்.

Updated On : 9 மே 2026, 2:20 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் ஆட்சியா் அறையில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய்.
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்டிஎக்ஸ் பொருத்தப்பட்ட மனித வெடிகுண்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இருப்பினும், வெடிகுண்டு எதிவும் கண்டறியப்படவில்லை.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்டிஎக்ஸ் பொருத்தப்பட்ட மனித வெடிகுண்டு வெடிக்கப்போவதாக மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை காலை மிரட்டல் வந்திருந்தது. பணிக்கு வந்த ஊழியா்கள் காலை 11 மணியளவில் அந்த மின்னஞ்சலை கவனித்து உடனடியாக மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், காவல் சாா்பு ஆய்வாளா்கள் அண்ணாமலை, பாபு ஆகியோா் தலைமையில் வெடிகுண்டு நிபுணா்கள் குழுவினா் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் அங்குள்ள அனைத்துத் துறை அலுவலகங்களிலும் விரிவான சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

Advertisement

Advertisement

இதனால், மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வெடிகுண்டு மிரட்டல் தகவல் அலுவலகம் முழுவதும் பரவியதால், ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் நிலவியது. ஆனால், சோதனை முடிவில் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்தனா்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments