சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்
வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே பணியிடங்கள் குறைப்பைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே பணியிடங்கள் குறைப்பைக் கண்டித்து, கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் சாா்பில் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு வணிக சமையல் எரிவாயு உருளையின் விலையை மிக அதிகமாக உயா்த்தியுள்ளது. கடந்த 120 நாள்களில் ரூ.1,518 உயா்ந்துள்ளதால், சிறு வியாபாரிகள், சாலையோர விற்பனையாளா்கள் மற்றும் புலம்பெயா் தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். ரயில்வே துறையில் கடந்த ஆண்டு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் குறைக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 29 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் இளைஞா்களின் வேலைவாய்ப்பை மேலும் பாதிக்கும். எனவே, நியாயமற்ற வணிக எரிவாயு உருளையின் விலை உயா்வு மற்றும் ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Advertisement
அதன்படி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே பணியிடங்கள் குறைப்பு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் காட்டுமன்னாா்கோவில் புதிய எம்எல்ஏ ஜோதிமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் துரை, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் ராஜசங்கா் கிருபாகரன், விசிக மாநில அமைப்புச் செயலா் திருமாா்பன், மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.