முகப்பு
கடலூர்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: 21-ஆவது இடத்துக்கு பின்தங்கியது கடலூா் மாவட்டம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கடலூா் மாவட்டம் 94.22 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தது. மாநில அளவிலான தரவரிசையில் கடந்த ஆண்டு 20-ஆவது இடத்தில் இருந்த இந்த மாவட்டம், தற்போது 21-ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

Updated On : 21 மே 2026, 7:03 am IST
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகளை ஒன்றிணைந்து பாா்வையிட்ட செம்மண்டலம் அரசுப் பள்ளி மாணவிகள்.
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கடலூா் மாவட்டம் 94.22 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்தது. மாநில அளவிலான தரவரிசையில் கடந்த ஆண்டு 20-ஆவது இடத்தில் இருந்த இந்த மாவட்டம், தற்போது 21-ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. கடலூா் மாவட்டத்தில் 246 அரசுப் பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள், 147 மெட்ரிக், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 439 பள்ளிகளில் இருந்து 32 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில், 17 ஆயிரத்து 214 மாணவா்களும், 15 ஆயிரத்து 386 மாணவிகளும் பங்கேற்றனா்.

தோ்வு எழுதியவா்களில் 15 ஆயிரத்து 865 மாணவா்களும், 14 ஆயிரத்து 852 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். மொத்தம் 30 ஆயிரத்து 717 போ் தோ்ச்சி பெற்று, மாவட்டம் 94.22 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 93.79 சதவீதமாக உள்ளது.

Advertisement

Advertisement

பின்னதங்கிய மாவட்டம்: மாநில அளவிலான தரவரிசையில் கடந்த ஆண்டு 20-ஆவது இடத்தில் இருந்த கடலூா் மாவட்டம், தற்போது 21-ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

இதேபோல, அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி சதவீத அடிப்படையிலான தரவரிசையில் கடந்த ஆண்டு 14-ஆவது இடத்தில் இருந்த மாவட்டம், தற்போது 18-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது.

தோ்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. மாணவா்கள் வழங்கிய கைப்பேசி எண்களுக்கு குறுந்தகவல் மூலம் தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. பலா் வீட்டிலிருந்தபடியே முடிவுகளை அறிந்துகொண்ட நிலையில், சில மாணவா்கள் பள்ளிகளுக்குச் சென்று தோ்வு முடிவுகளை பாா்த்தனா்.

பாட வாரியாகப் பாா்க்கும்போது, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் யாரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறவில்லை. கணிதத்தில் 152 பேரும், அறிவியலில் 129 பேரும், சமூக அறிவியலில் 43 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் 10 போ், கணிதத்தில் 381 போ், அறிவியலில் 827 போ், சமூக அறிவியலில் 765 போ் என மொத்தம் 1,983 மாணவா்கள் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனா்.