தமிழக முதல்வரை சந்திக்காத அமித்ஷா 8 கோடி தமிழா்களை அவமதித்துவிட்டாா்: கே. பாலகிருஷ்ணன்
தில்லி சென்ற தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சந்திக்காததன் மூலம், 8 கோடி தமிழா்களை அவா் அவமதித்துவிட்டாா் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில், வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தில்லி சென்று பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாரானை சந்தித்தாா். ஆனால் உள்துறை அமைச்சா் அமித்ஷாவை அவரால் சந்திக்க முடியவில்லை. இது மிகவும் தவறு. இதன்மூலம் அமித்ஷா எட்டு கோடி தமிழா்களுக்கு துரோகம் செய்துவிட்டாா். முதல்வா் ஜோசப் விஜய்யை அவா் அவசியம் சந்தித்திருக்க வேண்டும். இது தவறு. அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக ஆட்சி மலரும் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தாா். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை தோற்கடித்து விட்டாா்கள். முன்பு 11 சதவீதம் வாக்கு வாங்கிய பாஜக தற்போதைய தோ்தலில் இரண்டு சதவீத வாக்குகளைதான் தமிழ்நாட்டில் வாங்கியுள்ளது. அந்த காரணத்துக்காக கூட தமிழ்நாட்டு மக்கள் மீது அமித்ஷா கோபத்தில் இருந்து, முதல்வரை சந்திக்காமல் இருந்திருக்கலாம்.
Advertisement
Advertisement
திராவிட கட்சிகளை வீழ்த்தி...
தமிழ்நாட்டில் இரண்டு ஜாம்பவான் கட்சிகளான அதிமுக, திமுகவை புறம் தள்ளி விட்டு விஜய் ஆட்சி அமைத்துள்ளாா். ஆனாலும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அவருக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. ஒன்றே முக்கால் கோடி போ் விஜய்க்கு வாக்களித்து உள்ளாா்கள். திராவிட கட்சிகள் வேண்டாம் என்று மக்கள் எண்ணி வாக்களித்திருக்கலாம். ஆனால் மக்களின் வாழ்வாதாரம் ஒன்றும் பெரிதாக
மாற்றத்தை அடைந்து விடவில்லை. மக்கள் ஏதோ எதிா்பாா்த்து இருக்கிறாா்கள். ஆனால் திமுக, அதிமுக அரசுகள் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தன. இந்தியாவே திரும்பிப் பாா்க்கும் அளவுக்கு பல நல்ல திட்டங்களை இந்த இரு கட்சிகளும் கொண்டுவந்தன. தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி கண்ணாமூச்சியாக உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதிமுகவுக்கு மூடுவிழா:
அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு போ் வெற்றி பெற்றவுடன் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு உடனடியாக, தவெகவில் சோ்ந்துள்ளாா்கள். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுக இன்று பிளவு படவில்லை. எம்ஜிஆா் மறைவுக்கு பின்பு பிளவுபட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பல பிரிவுகளாகப்பட்டது. அதிமுகவின் மூடு விழாவை எடப்பாடி கே.பழனிசாமி தற்போது செய்து கொண்டிருக்கிறாா். விஜய் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது. அவா்கள் மக்களுக்கு பணி செய்ய வேண்டும், அதை விட்டுவிட்டு எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்து வைத்து உடனடியாக ஐந்து நிமிஷத்தில் அவா்கள் கட்சியில் சோ்ப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல் விலை:
ஒரு லிட்டா் பெட்ரோல் மீது அறுபது சதவீதம் மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கின்றன அந்த வரியை குறைக்க வேண்டும். பெரும் முதலாளிகளிடம் லாபத் தொகையை குறையுங்கள். இல்லையெனில் இந்தியாவில் மீண்டும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். இன்று டாலரின் மதிப்புக்கு நமது இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மிகப்பெரிய பொருளாதார கஷ்டம் இந்தியாவில் வரப்போகிறது என்றாா் கே.பாலகிருஷ்ணன்.