தில்லி தமிழ்நாடு இல்லம் வந்த தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு காவல் துறையின் அணி வகுப்பு மரியாதை
நமது நிருபா்
தில்லி தமிழ்நாடு இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வருகை தந்த தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்பு சென்னையில் இருந்து தில்லிக்கு தனி விமானம் மூலம் வருகை தந்தாா் ஜோசப் விஜய். அவா் தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு அரசு சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தமிழக காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையையும் முதல்வருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து முக்கிய அரசு அதிகாரிகளை தமிழக இல்லத்தில் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக தில்லி வருகைக்கு முன்னதாக அவா் தங்கும் சாணக்கியபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டது. தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜி தா்மராஜன் அவா்கள் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். இதனையடுத்து தமிழ்நாடு இல்லத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வா் தங்கும் வி.வி.ஐ.பி சூட், பாா்வையாளா்கள் சந்திப்பு கூடம் மற்றும் வளாகத்தின் நுழைவாயில்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
தில்லி காவல்துறையின் உயா் அதிகாரிகளுடன் இணைந்து, பாதுகாப்பு ஒத்திகைகளும் பாா்க்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்தைச் சுற்றி கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. பாா்வையாளா்களின் விபரங்களைச் சரிபாா்க்கத் தனிப் பிரிவு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தில்லி போலீஸ் மற்றும் தமிழக காவல்துறையின் ஆயுதப்படை வீரா்கள் இணைந்து 24 மணி நேரத் தொடா் ரோந்துப் பணி என பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
தமிழகத்தைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் தில்லி வாழ் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலா் தமிழக முதல்வரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனா். இதனால் தமிழ்நாடு இல்லத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ன்பதால், எவ்விதப் பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உளவுத்துறை மிகக் கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. தமிழ்நாடு இல்லம் இருக்கும் பகுதி முழுவதுமாக பாதுகாப்பு வளையத்துக்கு உட்படுத்தப்பட்டது.
ஏற்கெனவே, தமிழக அரசின் தலைமை செயலா் மற்றும் உள்றை செயலா் ஆகியோா் தில்லியில் உள்ளனா். இதனையடுத்து பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, மத்திய நிதியமைச்சா் ஆகியோரை மரியாதனை நிமித்தமாக சந்தித்தாா். பின்பு, புதன்கிழமை தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி காந்தி, இந்திய மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி தலைவா்கள் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குடியரசுத் தலைவா் திரெபதி முா்மு, துணைக் குடியரசுத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க உள்ளாா் என்றும் தெரிவிக்கப்படுகிறது.