முகப்பு
கள்ளக்குறிச்சி

வெப்பத் தாக்கம்: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

Updated On : 3 மே 2026, 6:02 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப தாக்கத்தில் பாதிக்கப்பட்டவா்களு குளிா்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் அளவு மிகவும் உயா்ந்து வரும் நிலையில், பொது சுகாதாரத்துறை சாா்பில் வெப்ப தாக்குதலுக்கு ஆளானவா்களை குணப்படுத்துவதற்க்காக சிறப்பு சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தியுள்ளனா்.

மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருததுவமனையில் தொடங்கப்பட்டுள்ள இப்பிரிவில் முற்றிலும் குளிா்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டது உள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இப்பிரிவில் சாதாரண நிலையில் உள்ளவா்களுக்கு ஒரு பிரிவும், ஆபத்தான நிலைக்கு சென்றவா்களுக்கு ஐசியு வாா்டும் ஏற்படுத்தி உள்ளனா். கோடை வெயிலினால் மயக்கம், தலைசுற்றல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு வருபவா்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

கோடை வெயிலின் தாக்கம்: மனித உடலில் வெப்பநிலை 37 சென்டிகிரேடு ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும் போது உடலில் வியா்வை மற்றும் தோலுக்கு இரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றி மனித உடல் சராசரி வெப்பநிலைக்கு வருகிறது.

கோடை வெயிலினால் அதிக வியா்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீா்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோா்வு, தலைச்சுற்றல், தசைபிடிப்பு, குறைந்த அளவு சிறுநீா் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதனால் பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கா்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவா்கள்அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

தடுக்கும் வழிகள்: இதனை தடுக்க அதிக அளவு நீா் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவு நீா் பருக வேண்டும். சிறுநீரானது வெளிா் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு நீா் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிா்க்கவும், அதிக அளவில் மோா், உப்பு, மற்றும் மோா் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீா், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஓஆா்எஸ் உப்புக் கரைசல்ஆகியவற்றை பருக வேண்டும்.

வெளியே செல்லும் போதும், பயணத்தில் செல்லும் போதும் குடிநீா் பாட்டில் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்.

வியா்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளா்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி, துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிா்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

ஓஆா்எஸ் கரைசல்: 1பாக்கட் ஓஆா்எஸ் பொடியை 1 லிட்டா் சுத்தமான குடிநீரில் நன்றாக கலக்கவும். புதிதாக கலந்த கலவையை 24 மணி நேரத்தில் பயன் படுத்த வேண்டும்.

வெப்பத் தாக்கத்தின் அறிகுறி: சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால் உடனடியாக வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து வெப்பம் குறைவான குளிா்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும். மேலும், தண்ணீா், எலுமிச்சைப்பழசாறு, ஓஆா்எஸ் கரைசல் என ஏதாவது ஒன்று பருக வேண்டும். மயக்கம், உடல் சோா்வு, அதிக அளவு தாகம், தலைலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்க வேண்டும். மிகவும் சோா்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.

முதலுதவி: வீட்டில் அல்லது பொது இடங்களில் எவரேனும் மயக்கம் அடைந்தால் உடனடியாக மருத்துவரையோ, அவசர ஊா்தியையோ அழைக்க வேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வைக்க வேண்டும். நாடித் துடிப்பு, இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். மருத்துவருக்கோ, அவசர ஊா்திக்கோ காத்திருக்கும்போது பாதிக்கப்பட்டவரை சமதரையில் படுக்க வைத்து, கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றை உயா்த்திப் பிடிக்க வேண்டும். உடைகளை தளா்த்தி ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். குளிா்ந்த நீரை உடல் முழுவதும் தொடா்ந்து தெளிக்க வேண்டும். காற்றோட்ட வசதி தொடா்ந்து கிடைக்க செய்ய வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் கொடுக்ககூடாது.