புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியே ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடல்வழி மற்றும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர காவல்படை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அதேபோல, புதுச்சேரியில் உள்ள கடலோர கிராமங்களில்
"சீ விஜில்' என்ற தலைப்பிலான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனால், புதுச்சேரி காலாபட்டிலிருந்து மூர்த்தி புதுக்குப்பம் வரை உள்ள 18 மீனவ கிராமங்களில் கடலோர பகுதியில் சட்டம்-ஒழுங்கு போலீஸார், கடலோர காவல்
படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலுக்கு செல்பவர்கள், கடலில் இருந்து வருவோரை போலீஸார் தீவிர சோதனைக்குப் பிறகே அனுப்பி வைத்தனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையிலும், துப்பாக்கி ஏந்தி ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனர்.
இதனிடையே, தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவிய, கடலோர காவல்படையைச் சேர்ந்த 2 பேரை புதுச்சேரி போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பிராங்கிளின், கார்த்திக் என்பது தெரியவந்தது.