புதுச்சேரி

புதுவை அரசின் கடனை விரைந்து திருப்பிச் செலுத்த வேண்டிய சூழல்கணக்கு தணிக்கைக் குழு ஆய்வில் தகவல்

DIN

புதுவை மாநில கடன் தொகை ரூ. 9,449 கோடியில் 72 சதவீதத்தை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேச அரசுகள் சட்டத்தின் கீழ், புதுவை அரசின் கடந்த 2018-19, 2019-20 மாா்ச் மாதத்துடன் முடிந்த நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையை இந்திய கணக்காய்வு, தணிக்கைத் துறை தலைவா் தாக்கல் செய்தாா். அந்த அறிக்கை புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.

அதில், கூறப்பட்டுள்ள நிதி தொடா்பான முக்கிய அம்சங்கள் விவரம்: புதுவை மாநிலத்தில் கடந்த 2019-20-ஆம் ஆண்டில் வருவாய் இனங்கள் ரூ.6,781கோடியாகவும், செலவினம் ரூ.6,836 கோடியாகவும் இருந்ததால், கடந்தாண்டை விட ரூ. 55 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும், நிதிப் பற்றாக்குறை ரூ.381கோடியாக அதிகரித்தது. தொடா்ந்து வருவாய் குறைவு, கடன் சுமை ஏற்றத்தால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, புதுவையில் கடந்த 2015-16-இல் ரூ. 7,754 கோடியாக இருந்த மாநிலத்தின் நிலுவைக் கடன், கடந்த 2019-2020-இல் ரூ. 9,449 கோடியாக அதிகரித்தது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1,695 கோடி கடன் அதிகரித்துள்ளது. இதனால், மொத்தக் கடனில் 72.51 சதவீதத்தை அடுத்த 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நிதி முறைகேடுகள்: 2020 மாா்ச் வரை அரசுத் துறைகளில் அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ. 114.62 கோடிக்கான தற்காலிக முன் தொகை சரிக்கட்டப்படாமல் இருந்தன. மேலும், ரூ.15.75 கோடிக்கான தற்காலிக முன் தொகை, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சரிகட்டப்படாமல் இருந்தன. கடந்த மாா்ச் 2020 வரை பல்வேறு அரசுத் துறைகளில் ரூ. 27.88 கோடிக்கு அரசு பணம் முறைகேடு, திருட்டு, கையாடல்கள் செய்யப்பட்டதும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

நஷ்டத்தில் பொதுத் துறை நிறுவனங்கள்: நிகழ் நிதியாண்டில் புதுவை மாநிலத்திலுள்ள 13 பொதுத் துறை நிறுவனங்களில் மொத்த முதலீடு ரூ.728.36 கோடியாக இருந்தது. இவற்றில், புதுவை அரசின் முதலீடாக ரூ.712.39 கோடி வழங்கிய வகையில், அதன் மூலம் ஆதாய வருவாய் 0.16 சதவீதம் மட்டுமே கிடைத்தது.

மாநிலத்தில் உள்ள 6 பொதுத் துறை நிறுவனங்கள் ரூ. 28.05 கோடி லாபத்தையும், 6 பொதுத் துறை நிறுவனங்கள் ரூ. 52.37 கோடி நஷ்டத்தையும் அடைந்தன. இதனால், அந்த நிறுவனங்கள் சராசரியாக ரூ.24.32 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. 12 அரசு நிறுவனங்களில், கணக்குகள் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருந்தன.

மாநிலத்தில் மொத்தமுள்ள அரசு சாா்ந்த 71(அமைப்புகள்-குழுமங்கள்) நிறுவனங்களில், தணிக்கையில் பெறப்படாமல் 15 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT