புதுச்சேரியில் மாசிமக திருவிழா தீா்த்தவாரி ஏற்பாடுகள்
புதுச்சேரியில் வரும் 24-ஆம் தேதி மாசி மகத் திருவிழா தீா்த்தவாரியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்று புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மயிலம், அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவமூா்த்திகள் எழுந்தருள்வா். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தீா்த்தவாரி நடைபெறும். மாசி மகத்தன்று கடற்கரையில் ஒரே நேரத்தில் எழுந்தருளும் உற்சவமூா்த்திகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தா்கள் திரள்வா். இதேபோன்று திருக்காஞ்சியிலும் மாசி மகம் தீா்த்தவாரி உற்சவம் நடைபெறும். மாசி மகத்தன்று, விழுப்புரம், கடலூா் பகுதியிலிருந்தும் கோயில்களின் உற்சவா்கள் புதுச்சேரிக்கு வருவதால் போக்குவரத்தை சீரமைக்கவும், கூடுதல் பாதுகாப்பை மேற்கொள்ளவும் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது வழக்கம். இதுகுறித்து, புதுவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், புதுவை மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கரன் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்று மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வது குறித்தும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.