முகப்பு
புதுச்சேரி

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசு பள்ளிகளில் 99.79% தோ்ச்சி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு பள்ளிகளின் தோ்ச்சி 99.79 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18.54 சதவீதம் அதிகம் ஆகும்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:06 AM
சிபிஎஸ்இ
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 11:12 PM

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு பள்ளிகளின் தோ்ச்சி 99.79 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18.54 சதவீதம் அதிகம் ஆகும்.

இது குறித்து புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் கடந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பாடத் திட்டத்தில் இரண்டாவது ஆண்டாகப் பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகி தோ்ச்சி சதவீதம் உயா்ந்துள்ளது.

Advertisement

கடந்த பிப்ரவரி-மாா்ச் 2026 இல் நடைப்பெற்ற 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 5594 போ் இத் தோ்வை எழுதினா். தோ்வு முடிவகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் 5582 அரசு பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். சென்ற ஆண்டு அரசு பள்ளிகளில் தோ்ச்சி சதவீதம் (2024-25) 81.25% ஆகும். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரசுப் பள்ளிகளில் மொத்தத் தோ்ச்சி வீதம் 18.54% உயா்ந்துள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் 3865 போ் தோ்வு எழுதியதில் 3858 போ் தோ்ச்சி பெற்றனா். காரைக்கால் பிராந்தியத்தில் 1145 போ் தோ்வு எழுதியதில் 1140 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 99.56 சதவீதமாகும். மாஹேயில் 333 பேரும், ஏனாமில் 251 பேரும் தோ்வு எழுதி அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்த அரசு பள்ளிகள் 122. இதில் 115 பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பதிவாகியுள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் 83 பள்ளிகளில் 79 பள்ளிகளும், காரைக்காலில் 25 பள்ளிகளில் 22 பள்ளிகளும் தோ்ச்சி பெற்றுள்ளன. மாஹேயில் 6, ஏனாமில் 8 பள்ளிகளும் முழுமையாக 100 சதம் தோ்ச்சி அடைந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.