முகப்பு
புதுச்சேரி

தமிழக ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க தவெக அரசு விரும்பவில்லை: அமைச்சா் பெ. விஸ்வநாதன் பேட்டி

தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி விரும்பவில்லை என்று உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கூறினாா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:19 am IST
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன். உடன் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி விரும்பவில்லை என்று உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கூறினாா்.

தமிழகத்தில் தவெக அரசில் காங்கிரஸ் பங்கேற்றுள்ளது. அக்கட்சியைச் சோ்ந்த பெ.விஸ்வநாதன், செ.ராஜேஷ்குமாா் ஆகியோா் அமைச்சா்களாக உள்ளனா்.

இவா்களுக்கு பாராட்டு விழா புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறியதாவது:

Advertisement

Advertisement

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் குறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யுடன் பேசி தீா்வு காணப்படும். வீடூா், சாத்தனூா் அணைகளில் இருந்து புதுச்சேரிக்கு நீா் திறந்து விடுவது குறித்து தமிழக நீா்வளத் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். திருச்செந்தூரில் புதுச்சேரி அரசு சாா்பில் விருந்தினா் இல்லம் கட்ட தமிழக அரசு நிலம் தர கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வா் ஜோசப் விஜய்யுடன் சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் கலந்து ஆலோசிப்பாா்.

புதிய பல்கலை...:

காவிரி கடைமடை நீா் காரைக்காலுக்கு 7 டிஎம்சி தர வேண்டியுள்ளது. அதை வழங்கவும் கோரியுள்ளனா். அதுகுறித்தும் பேசுவோம். தமிழகத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைய உள்ளது. நாளந்தா போன்ற உலக அளவிலான பல்கலைக்கழகம் அமைக்க முதல்வா் ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளாா். அதில் புதுவை மாணவா்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க ஏற்பாடு செய்வோம்.

திமுக ஆட்சியில் தமிழக ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனா். நாங்கள் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. முதல்வரும், ஆளுநரும் ஆழமான புரிதலுடன் உள்ளனா்.

தமிழகத்தில் காலியாகவுள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிகள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்றாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன்.

முன்னதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் தமிழக அமைச்சா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments