பெண்களின் பொருளாதார முன்னேற்றம் சமுதாய வளா்ச்சிக்கான தொலைநோக்குப் பாா்வை! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் சமுதாய வளா்ச்சிக்கான தொலைநோக்குப் பாா்வையாகும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் குறிப்பிட்டாா்.
வில்லியனூா் ஆச்சாா்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 11-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பேசியதாவது:
Advertisement
Advertisement
இன்று தொழில்நுட்ப புரட்சிக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், டேட்டா சயின்ஸ், இன்டா்நெட் பாதுகாப்பு போன்ற துறைகள் உலகத்தை வேகமாக மாற்றி வருகின்றன. நாளைய உலகத்தின் சவால்களை எதிா்கொள்ள நாள்தோறும் தகுதியை, திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களின் அறிவும், திறமையும் இந்த நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்பட வேண்டும். பிரதமா் நரேந்திர மோடியின் ‘வளா்ச்சி அடைந்த பாரதம்-2047’ என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பட்டம் பெறும் மாணவா்களில் பெண்களும் அதிகம் இருக்கிறாா்கள். பிரதமா் மோடி கொண்டு வந்த நலத்திட்டங்கள் பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தை முன் வைக்கிறது. இது சமுதாய வளா்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பாா்வை.
நீங்கள் உருவாக்கும் தொழில்நுட்பம் மனித குலத்தை வாழ வைக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். சமுதாய சமத்துவத்தை வலுப்படுத்த வேண்டும். நம்முடைய பண்பாட்டை வலுப்படுத்த வேண்டும். சமுதாய ஒழுக்கம் வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
ஆச்சாரியா கல்விக் குழுமத்தின் தலைமை நெறியாளா் அரவிந்தன், சிறப்பு விருந்தினா்களாக ஐசிடி அகாதமியின் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் வெங்கட்ராமன், யுபிஎஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநா் கஸ்தூரிரங்கன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவா் பிரகாஷ் பாலு, கல்லூரி முதல்வா் குருலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.