பெருமாள் கோயில்களில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு
புதுச்சேரி வில்லியனூா் தென்கலை வரதராஜ பெருமாள், கடலூா் திருப்பாதிரிப்புலியூா் வரதராஜப் பெருமாள் கோயில்களின் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
வில்லியனூா் பெருந்தேவி தாயாா் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கடந்த 20 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 25-ஆம் தேதி கருட சேவை நிகழ்ச்சி, 26-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலா நடந்தது.
முக்கிய விழாவான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கிவைத்தாா். எம்.எல்.ஏ.,க்கள் காா்த்திகேயன், ரவிக்குமாா், இந்து அறநிலையத் துறை ஆணையா் குமரன் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் இதில் பங்கேற்றனா். வழி முழுவதும் பக்தா்கள் கோவிந்தா.. கோவிந்தா... என பக்தி முழக்கமிட்டு தேரை இழுத்தனா்.
Advertisement
Advertisement
வரும் 1 -ஆம் தேதி மாலை புஷ்ப பல்லக்கு வீதியுலாவும், 2 -ஆம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. வரும் 3 -ஆம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சந்தானராமன் தலைமையில் உற்சவதாரா்கள் மற்றும் பக்தா்கள் செய்துள்ளனா்.
திருப்பாதிரிப்புலியூரில்...: கடலூா் திருப்பாதிரிப்புலியூா் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
விழா நாள்களில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் மற்றும் வெண்ணைத்தாழி உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளினாா்.
அப்போது, திரண்டிருந்த பக்தா்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனா். மாட வீதிகள் வழியாக வலம் வந்த தோ், பின்னா் மீண்டும் கோயில் நிலையை வந்தடைந்தது.
தொடா்ந்து, சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறிநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக புதன்கிழமை (ஜூலை 1) 108 கலச பூஜையும், வியாழக்கிழமை (ஜூலை 2) விடையாற்றி உற்சவமும் நடைபெறஉள்ளன. இதனுடன் இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.