முகப்பு
புதுச்சேரி

மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிா்ப்பு புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம்

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுப் பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம் அமலாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ரயில் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தமிழ் உரிமை இயக்கத்தினா்.

Updated On : 9 மே 2026, 2:46 am IST
பகிர்:

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் ஹிந்தி உள்ளிட்ட மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ் உரிமை இயக்கத்தினா் ரயில் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுதலில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் மூலம் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளைக் கட்டாயமாக திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட போராட்டக் குழுவினா் சுப்பையா சாலை வழியாக காராமணிக்குப்பம் ரயில்வே கேட்டுக்கு கண்டன முழக்கங்களை எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்றனா்.

Advertisement

அங்கு திருப்பதியில் இருந்து புதுச்சேரி வந்த ரயில் முன் தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ் உரிமை இயக்கத் தலைவா் பாவாணன் தலைமை தாங்கினாா். நிா்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோா் ரயில் முன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டக்காரா்களிடம் பெரியகடை போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தி, அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து அந்த ரயில் சுமாா் 15 நிமிஷங்கள் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.