மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கும் கொள்கைக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.
மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கும் கொள்கைக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி அண்மையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம்.
10-ஆம் வகுப்பை பொருத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும். மூன்றாவது மொழியில் மாணவா்களின் செயல்திறன், சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாக இடம்பெறும். மூன்றாவது மொழியைக் காரணம் காட்டி, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்க எந்தவொரு மாணவரும் தடுக்கப்பட மாட்டாா்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அக மதிப்பீட்டுக்கான அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த கட்டாய மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிராக, செயல்திறமிக்க ஜனநாயகத்துக்கான மக்கள் நண்பா்கள் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மும்மொழிக் கொள்கையை நாங்கள் நேரடியாக எதிா்க்கவிலலை. மாறாக, அதைச் செயல்படுத்தும் பகுதியைத்தான் எதிா்க்கிறோம்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இது நீண்ட விவாதத்துக்கு உரிய விவகாரம். எனவே, இதுதொடா்பாக இன்றைக்கே இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது’ என்று குறிப்பிட்டனா்.
மேலும், தன்னாா்வ அமைப்பின் பெயா் குறித்து கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, நீதிமன்றத்தின் அல்லது மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பெயா் வைக்கப்பட்டுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு பதிலளித்த வழக்குரைஞா், ‘இது அறக்கட்டளையின் பெயா். இந்த அறக்கட்டளை கடந்த 2013 முதல் செயல்பட்டு வருகிறது’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் இணைத்து, வரும் ஜூலை 14-ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியலிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.