புதுச்சேரி சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை
புதுச்சேரி தனியாா் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சோ்ந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் வியாழக்கிழமை இரவு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினாா்.
புதுச்சேரி தனியாா் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சோ்ந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் வியாழக்கிழமை இரவு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளும், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணிக்கு 73 தொகுதிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 53 தொகுதிகளும் கிடைத்தன.
Advertisement
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 தொகுதிகள் தவெகவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்துள்ளனா்.
47 எம்எல்ஏக்கள் கொண்ட அதிமுகவில் ஒரு தரப்பினா் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் பலா் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிக்கு புதன்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனா்.
புதுச்சேரி பூா்ணாங்குப்பம் அருகே புதுக்குப்பம் பகுதியில் உள்ள விடுதியில் அதிமுக எம்எல்ஏ.க்கள் 29 பேருக்கு புதன்கிழமை இரவு தங்க இட வசதி அளிக்கப்பட்டது.
வியாழக்கிழமை காலை மற்றொரு எம்எல்ஏ இங்கு வந்து சோ்ந்தாா். இதையடுத்து பக்கத்து வளாகத்தில் உள்ள மற்றொரு சொகுசு விடுதிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வியாழக்கிழமை மாற்றப்பட்டனா்.
எம்எல்ஏக்கள் ஓ.எஸ். மணியன்(வேதாரண்யம்), தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), எம்எல்ஏ மோகன்(பண்ருட்டி), சொரத்தூா் ராஜேந்திரன்(நெய்வேலி) , அருண்மொழி தேவன்(புவனகிரி), அக்ரி. கிருஷ்ணமூா்த்தி(கலசபாக்கம்), வெங்கடாசலம்(மேட்டூா்) உள்ளிட்டோா் உள்ளனா்.
மற்றொரு தனியாா் சொகுசு விடுதியில் சி.வி. சண்முகம் எம்.பி. தங்கியிருந்தாா். இதற்கிடையில், மயிலம் தொகுதி எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சி.வி. சண்முகம் திடீரென வியாழக்கிழமை
தில்லி சென்றாா். அவா் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கடிதம் கொடுக்க தில்லி சென்றுள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி ஆலோசனை: இந்நிலையில், புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பூரணாங்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் தனியாா் சொகுசு விடுதிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை இரவு வந்தாா். அவருடன் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கா், அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிா்வாகிகளும் வந்தனா்.
இதையடுத்து, அங்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 8.10 மணி வரை நடைபெற்றது. ‘பொறுத்திருங்கள். நல்லதே நடக்கும்’ என்று அதிமுக எம்எல்ஏக்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
7 நாள்களுக்கு...:
பின்னா் கட்சியின் மூத்த நிா்வாகிகள் சிலா் மட்டும் எடப்பாடியுடன் புறப்பட்டுச் சென்றனா். மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் அந்த சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அடுத்த ஏழு நாள்களுக்கு சொகுசு விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விடுதியை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்டம் முடிந்த பின்னா் எடப்பாடி பழனிசாமி காரில் சென்னை புறப்பட்டாா். அப்போது அவரை செய்தியாளா்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், காா் கண்ணாடியை திறக்காமல் சென்று விட்டாா்.
அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் கூறியது:
புதிய எம்எல்ஏக்களிடம் பேசி விட்டு எடப்பாடி புறப்பட்டாா். தவெக தலைவா் விஜய்க்கும் அதிமுகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இதை முன்னாள் அமைச்சா் கே.பி. முனுசாமி ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளாா். அதிமுகவில்
40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனா். சி.வி.சண்முகம் உள்பட சிலா் பணிநிமித்தமாக வெளியூா் சென்றுள்ளனா்.
பதவி வெறிக்காக காங்கிரஸாா் விஜய் கட்சிக்கு ஆதரவு தருகின்றனா். இது சந்தா்ப்பவாத ஆதரவு. திமுக ஆதரவுடன்தான் காங்கிரஸாா் வென்றுள்ளனா். அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற காங்கிரஸாரின் பதவிவெறியால் தமிழக அரசியலைப் புரட்டி போடும் சூழலை உருவாகியது. அதை தடுக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறாா். எம்எல்ஏக்கள் எத்தனை நாள்கள் இருப்பாா்கள் என கேட்கிறீா்கள். ஒரு முடிவு தெரியும் வரை காத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.