கல்வராயன்மலைப் பகுதியில் 1,439 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
கல்வராயன்மலைப் பகுதியான கரியாலூரில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு முகாமில் 1,439 பேருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.
கல்வராயன்மலைப் பகுதியான கரியாலூரில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு முகாமில் 1,439 பேருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.
கரியாலூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், மதுவிலக்குப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் பாண்டியன் வரவேற்றார்.
முகாமில், கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்திய 33 பேருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை சார்பாக கால்நடை பராமரிப்புத் துறை மூலம்தலா 30,000 வீதம் ரூ.9,90,000 மதிப்பீட்டில் கறவை மாடுகளும், 1001 பேருக்கு சாதிச் சான்றிதழ்களும், சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கு ரூ.2,40,000 மதிப்பீட்டிலும், சங்கராபுரம் வட்டத்தைச் சேர்ந்த 15 பேருக்கு 1,80,000 மதிப்பீட்டிலும் முதியோர் உதவித் தொகையும், சின்னசேலம் வட்டத்தைச் சேர்ந்த 19 பேருக்கு ரூ.11,05,800 மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டையையும், தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 24 பேருக்கு ரூ.32,84,820 மதிப்பீட்டிலும் நலத் திட்ட உதவிகளும் 106 பேருக்கு ரூ.1,80,20,000 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளும் என மொத்தம் 1,439 பேருக்கு ரூ. 4,36,14,385 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் கிராமப் பகுதியிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கள்ளச்சாராயம் தயார் செய்பவர்கள் தானாக மனம் மாறினால் மட்டுமே கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். அவ்வாறு மனம் திருந்தியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டே நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகின்றன
மலைவாழ் மக்கள் அறியாமையால் செம்மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் மூலம் மலைவாழ் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராஜ், வேளாண் துணை இயக்குநர் பா.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஆர்.செல்வசேகர், வேளாண்மை அலுவலர் சுரேஷ், தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) அன்பழகன், தோட்டக்கலை அலுவலர் தே.சத்தியராஜ் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.