காவலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட 3 பேர் கைது
மரக்காணம் அருகே சாலையோரம் சடலமாகக் கிடந்த காவலாளி, குடும்பத் தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மரக்காணம் அருகே சாலையோரம் சடலமாகக் கிடந்த காவலாளி, குடும்பத் தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(39). இவர், பக்கத்து கிராமமான ஆலத்தூரில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் அவர் உடலில் காயங்களுடன் திண்டிவனம் சாலையோரம் குரும்புரம் என்ற இடத்தில் சடலமாகக் கிடந்தார். சடலத்தை போலீஸார் கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நிகழ்விடத்துக்கு கொண்டுவரப்பட்ட மோப்ப நாய், சடலம் கிடந்த இடத்தில் இருந்து பெரியசாமியின் வீட்டுக்குச் சென்று நின்றது. பின்னர், அங்கிருந்த பெரியசாமியின் மனைவி மைதிலியை( 32) சுற்றி வந்தது.
விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் மைதிலியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் தெரியவந்ததாவது: பெரியசாமியுடன் மைதிலியும் தோப்பில் தங்கி வேலை செய்து வந்தாராம். அப்போது, அவரது நடத்தையில் சந்தேகமடைந்த பெரியசாமி அவ்வப்போது, குடித்து விட்டு மைதிலியை அடித்து துன்புறுத்தினாராம்.
ஞாயிற்றுக்கிழமை இரவும் வழக்கம்போல மைதிலியை பெரியசாமி அடித்தாராம். இதனை, வீட்டுக்கு வந்திருந்த மைதிலியின் தம்பி செஞ்சி அருகே அனந்தபுரத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி(27), தாய் மலர்(55) ஆகியோர் தட்டிக் கேட்டனர். ஆனால், பெரியசாமி அவர்களையும் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிரஞ்சீவி பெரியசாமியை கட்டையால் தாக்கியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அதனால், அதிர்ச்சியடைந்த மூன்று பேரும் சேர்ந்து பெரியசாமியின் சடலத்தை காரில் ஏற்றிச் சென்று குரும்புரத்தில் சாலையோரம் வீசியுள்ளனர்.
இதையடுத்து, சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றம் செய்து மரக்காணம் போலீஸார் மைதிலி, சிரஞ்சீவி, மலர் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.