"கிராமங்களில் தொழில் பெருக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்'
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான தொழில்கள் தொடங்கும் வகையில் மின்சாரம், இட வசதிகளை தமிழக அரசு ஏற்பாடுத்தித் தர வேண்டும் என்று இலகு உத்யோக் பாரதி என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான தொழில்கள் தொடங்கும் வகையில் மின்சாரம், இட வசதிகளை தமிழக அரசு ஏற்பாடுத்தித் தர வேண்டும் என்று இலகு உத்யோக் பாரதி என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இலகு உத்யோக் பாரதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாரத பிரதமர் அண்மையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும், மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் இந்த அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறு, குறு, நடுத்தர தொழில் தொடங்குவோர் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு இணைய வழியாக 59 நிமிடங்களில் அனுமதி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார்.
இந்தத் திட்டம் தொடக்கப்பட்ட முதல் நாளிலே 800 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடன் வழங்குவதை நாடு முழுவதும் உள்ள 100 மாவட்டங்களை நேரடியாக பிரதமரே கண்காணிக்க உள்ளார். அந்த மாவட்டங்களுக்கு மத்திய அமைச்சர்களையும் அனுப்பி வைத்துள்ளார். சிறு தொழில்கள் தொடங்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதனை பொதுமக்களும், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், விழுப்புரம் மாவட்டம், தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில் பின்தங்கியுள்ளது. ராணுவ உபகரணங்கள் தொடங்கும் டிஃபன்ஸ் காரிடார் திட்டத்திலும் விழுப்புரம் மாவட்டம் இடம்பெறவில்லை. ஆகவே, இந்தத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திலும் தொழில் தொடங்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
மேலும், 1000 ஏக்கர், 2000 ஏக்கர் என பெரிய தொழில்களை தொடங்க அனுமதி வழங்குவதை விடுத்து, கிராமங்கள் தோறும், 10 ஏக்கருக்குள் தொழில் செய்யும் மையங்களை அமைக்க வேண்டும். அந்த கிராமத்துக்குத் தேவையான வசதிகளையும், தேவைகளையும் உருவாக்க வேண்டும்.
மோட்டார் பழுதுபார்ப்பகம், மின் சாதான பழுதுபார்ப்பகம் போன்றவை அமைய வேண்டும். இதற்குத் தகுந்த இடத்தை ஒவ்வொரு கிராமத்திலும் ஒதுக்க வேண்டும். கிராமங்களில் தொழில் தொடங்கினாலும், அதற்குத் தேவையான மும்முனை மின்சாராம் கிடைப்பதில்லை. 6 மணி நேரத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனால், கிராமங்களில் தொழில் தொடங்கினாலும், செயல்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. ஆகையால், கிராமங்களில் சிறு தொழில் நிறுவனங்கள் அதிகரிக்க மும்முனை மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், மற்றும் இலகு உத்யோக் பாரதி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.