மது கடத்தல்: இளைஞர் கைது
ஆரோவில் அருகே புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆரோவில் அருகே புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகேயுள்ள பட்டானூர் சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் 117 இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர், சென்னை நன்மங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சங்கர்(31) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி சென்னைக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, கார் மற்றும் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை கோட்டக்குப்பம் மது விலக்குப் பிரிவில் ஒப்படைத்தனர். இது குறித்து கோட்டக்குப்பம் மது விலக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.