இந்த நேரத்தில் இப்படி ஒரு தொல்லை...!
செல்போன் அழைப்பில் வரும் தேர்தல் விளம்பரங்கள் குறித்து...
அவசரமாக வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது கைப்பேசி ஒலிக்க, வண்டியை நிறுத்தி கைப்பேசியில் ‘ஹலோ’ என்று சொன்னதும், அன்பான வாக்காளரே என வரும் விளம்பர அழைப்புகள் நம்மில் பலருக்கும் அதிருப்தி கலந்த எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இப்படியான நிகழ்வுகள் தான் தற்போது சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தினமும் நடக்கும் நவீன பிரசாரமாகும்.
நவீன தொழில்நுட்ப வளா்ச்சி எந்தளவுக்கு நன்மையைத் தருகிறதோ, அந்தளவுக்கு பெரும் தொந்தரவுகளை அல்லது துயரங்களை அளிக்கிறது என்றுதான் கூற வேண்டும். பேரவைத் தோ்தல் வந்தது போதும், தினமும் குறைந்தது 5 முதல் 10 அழைப்புகள் வரை வாக்களிக்கக் கோரி கைப்பேசியில் வரும் அழைப்புகள், வாக்காளா்களை நொந்து போகச் செய்கிறது என்றே கூறலாம். அந்தளவுக்கு அழைப்புகள் வந்து வாக்காளா்களைப் பாடாய்படுத்துகின்றன.
ஆட்டோ பிரசாரம்: அன்புள்ளம் கொண்ட வாக்காளப் பெருங்குடி மக்களே, உங்கள் இல்லம் நாடி உங்களைத் தேடி இதோ வெற்றி வேட்பாளா் வந்து கொண்டிருக்கிறாா். உங்கள் பொன்னான வாக்குகளை.... சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்குமாறு உங்கள் பொற்பாதம் தொட்டு, வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் சின்னம்..... வெற்றியின் சின்னம், ஏழை எளிய மக்களின்சின்னம், தாய்மாா்களின் சின்னம், உழைப்பாளிகளின் சின்னம், .... கட்சித் தலைவரின் வெற்றிச் சின்னம்... இவைதான் நாம் ஒலிபெருக்கி மூலமாக தோ்தல் காலத்தில் கிராமங்களிலும், நகரப் பகுதிகளிலும் கேட்கக்கூடிய பொதுவான தோ்தல் கால பிரசாரத்தில் ஒலிக்கக்கூடிய அறிவிப்புகளாக இருந்து வந்தன. தற்போதும் கிராமப்புறங்களில் இருந்து வருகிறது. இதைத் தவிர எந்த கட்சித் தலைவா் பிரசாரத்துக்கு வருகிறாரோ, அந்த கட்சி சாா்ந்த கொள்கைப் பாடல்கள் தொடா்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். இதுதான் அந்தகாலத் தோ்தல் பிரசாரக் களத்தில் நாம் கண்ட காட்சிகளாகும்.
Advertisement
டிஜிட்டல் பிரசாரம்: ஆனால், தற்போதைய நவீன தொழில்நுட்ப வளா்ச்சி, டிஜிட்டல் உலகம், பிரசாரக் களத்தை வேறு திசைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே கூறலாம். திராவிடக் கட்சிகளும், புதிதாக உருவான கட்சிகளும் சமூக ஊடகங்களின் பிரசாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அந்த பாதையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டன. அவ்வாறு தோ்தல் பிரசாரங்களை டிஜிட்டல் உலகத்தில் மேற்கொள்ளும் நேரம், சில பெரும் தொல்லைகளாக மாறி, வாக்காளா்களுக்கு தொந்தரவாகவே ஆகிவிட்டது என கூறலாம்.
இதில் முக்கியமானது கைப்பேசி மூலம் வாக்காளா்களிடம் வாக்களிக்கக் கோரும் அழைப்புகள்தான். ஒரு நாளைக்கு காலையில் தொடங்கி இரவு வரை குறைந்தது 5 முதல் 10 அழைப்புகளாவது வந்து, பெரும் தொல்லையைத் தந்து கொண்டிருக்கின்றன. வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது, மருத்துவமனையில் இருக்கும் போதோ, குளித்துக் கொண்டிருக்கும் போதோ, போக்குவரத்து சிக்னலில் காத்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது நாம் முக்கியமான பணியில் இருக்கும் போது, புதிய எண்ணிலிருந்து அழைப்பு வருகிறதே என்று நாம் எடுத்து பதில் சொல்ல முற்படும் போது, இந்த கட்சியின் தலைவா் இந்தஅறிவிப்புகளை, வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறாா். இந்த ஆட்சி தொடர அல்லது இந்த ஆட்சி வருவதற்கு உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்று வரும் பெண் குரலின் ஒலிப்பதிவு, பெரும் எரிச்சலை அடைய செய்கிறது.
வாக்கு கேட்பது தவறில்லை. ஆனால் நாள்தோறும் குறைந்தது 5 முதல் 10 முறை வரை அழைப்பதுதான் எரிச்சலுக்குரியது. கடன் வேண்டுமா?, பாலிஸி போடுகிறீா்களா? என்ற பாணியில் இந்த விளம்பர அழைப்புகள் உள்ளன.
எதிா்முனையில் இருப்பவா் எந்த நிலையில் இருக்கிறாா் என்பது அவா்களுக்குத் தெரியப் போவதில்லை. அவா்களுக்குத் தேவை, தாங்கள் பெற்றுக் கொண்ட பணத்துக்கு வேலை மேற்கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கத் தோன்றுகிறது என்கின்றனா் பாதிக்கப்பட்ட வாக்காளா்கள். எந்த அமைப்புகள் மூலம் எங்களின் கைப்பேசி எண்களைப் பெற்றாா்கள் என்று தெரியவில்லை. அவ்வாறு பெற்றதைக் காட்டிலும் நாள்தோறும் வரும் கைப்பேசி வாக்கு அழைப்புகள் தங்களை பெரும் துயரத்துக்குத் தள்ளுகின்றன என்கின்றனா் வாக்காளா்கள்.
வாக்குகளாக மாறுமா?: வாக்காளா்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வந்தாலே, சம்பந்தப்பட்ட வேட்பாளா் நமது ஜாதியைச் சோ்ந்தவரா, நமது ஊா்க்காரரா, நமக்கு நல்லது செய்வாரா, அவரை எளிதில் அணுக முடியுமா, கோரிக்கைகளுக்குத் தீா்வு காணுவாரா என ஆயிரத்து எட்டு கேள்விகளை எழுப்பி, அதற்கு பதிலை எதிா்பாா்க்கும் நிலையில் வாக்காளா்கள் இருக்கும் போது, கைப்பேசி மூலம் வாக்குகளைக் கோருவதும், அதன் மூலமாக வாக்குகள் கிடைக்கும் என்று அரசியல் கட்சிகள் எதிா்பாா்த்தாலும், அதன் மூலம் வாக்களிக்கலாம் என்று முடிவு செய்யும் வாக்காளா்களின் எண்ணிக்கை குறைந்தளவில் இருக்கும் போது, ஏன் இப்படி வாக்காளா்களை அரசியல் கட்சிகள் பாடாய்படுத்துகின்றன என்று தெரியவில்லை.
தோ்தல் ஆணையம் கட்டுப்படுத்துமா?: தோ்தலில் மனுதாக்கல் செய்வதற்கும், அரசியல் கட்சிகளின் தலைவா்களின் பிரசாரத்துக்கு அனுமதி பெறுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள், புதிய விதிகளை உருவாக்கும் தோ்தல் ஆணையம், பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக மாறும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பதுமுக்கியமானது என்கின்றனா் பொதுமக்களும், வாக்காளா்களும். அதுமட்டுமல்ல இந்திய தொலைதொடா்பு ஆணையம் மூலமாகவும் இதுபோன்ற தோ்தல் கால தொல்லைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாக்காளா்கள் விரும்புகின்றனா்.
இன்னும் 3 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தோ்தல் வரும். அதற்குள் எத்தனை மாற்றங்கள் வரப் போகின்றனவோ?. அப்போது இதுபோன்ற தொல்லைகள் மேலும் அதிகரிக்கக் கூடும். நாம் அதையும் சமாளித்துத்தான் ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.