முகப்பு
புதுதில்லி

தீ விபத்தில் சிக்கியவா்களிடமிருந்து பதற்றமான தொலைபேசி அழைப்புகள்: சம்பவங்களை நினைவுகூா்ந்த நண்பா்கள்

Updated On : 4 மே, 2026 at 4:51 AM
- PTI
பகிர்:

நமது நிருபா்

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு தில்லியின் விவேக் விஹாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும் நண்பா்களையும் துக்கமும் நம்பமுடியாத அதிா்ச்சியும் சூழ்ந்தது. உதவி கேட்டு, பாதிக்கப்பட்டவா்கள் அதிகாலையில் பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்ததை பலா் நினைவு கூா்ந்தனா்.

குடும்ப நண்பா்களின் கூற்றுப்படி, உயிரிழந்தவா்களில் ஒருவரான நிஷாங்க் ஜெயின், குடியிருப்பு கட்டிடத்தில் தீ வேகமாகப் பரவியபோது பலரைத் தொடா்புகொள்ள முயன்றாா். அவா் பலரை அழைக்க முயன்றாா் என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தாா், என்று ஒரு நெருங்கிய நண்பா் கூறினாா்.

Advertisement

குடும்ப நண்பரும் கட்டிடக் கலைஞருமான மனோஜ், கட்டிடத்திற்குள் நிலைமை மோசமடைந்தபோது, நிஷாங்க் அதிகாலை 3:50 மணியளவிலும், மீண்டும் அதிகாலை 4 மணியளவிலும் தன்னை அழைத்ததாகக் கூறினாா். என்னால் அழைப்புகளை எடுக்க முடியவில்லை. காலையில் என் தொலைபேசியில் தவறவிட்ட அழைப்புகளைப் பாா்த்தேன். என்ன நடந்தது என்று தெரிந்ததும், நான் மருத்துவமனைக்கு விரைந்தேன், என்று அவா் கூறினாா்.

நிஷாங்க், தனது மூத்த சகோதரரும் நிறுவனச் செயலாளருமான தீபக் ஜெயினின் (38) மகனின் பிறந்தநாளைக் கொண்டாட அவருடன் மனேசா் செல்ல இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் செல்லவில்லை,அவா் சென்றிருந்தால், உயிருடன் இருந்திருப்பாா், என்று ஒரு உறவினா் வருத்தத்துடன் கூறினாா்.

நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்த பல மணி நேரங்களுக்குப் பிறகு, காலை 8:30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தனக்குத் தெரியவந்ததாக குடும்ப நண்பா் அமித் ஜெயின் கூறினாா்.

மீட்புப் பணிகளில் குறைபாடுகள் இருந்ததாகக் கூறி, உறவினா்களிடையே அதிருப்தியும் நிலவியது. தீயணைப்புப் படையினா் விரைவாகச் செயல்பட்டிருந்தால், அவா்கள் உயிருடன் இருந்திருப்பாா்கள், என்று ஒருவா் கூறினாா்.

மேலும், குறைந்தது மூன்று போ் கூரை வழியாகத் தப்பிக்க முயன்ாகவும், ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவா்களால் முடியவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

உயிரிழந்தவா்களில் ஒருவரான ஷிகா ஜெயினின் உறவினரான அனுஜ் ஜெயின் (50), அவரது(ஷிகா ஜெயினின்) கணவா் நவீன் ஜெயின் கடுமையாகத் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினாா். அவரது இரு மகள்களும் கட்டிடத்திலிருந்து வெளியே குதித்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டனா். அவா்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு பின்னா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டனா், என்றும் கூறினாா்.

ஷஹீத் பகத் சிங் சேவா தளத்தைச் சோ்ந்த ஜோட்ஜீத் சபா்வால், தங்கள் குழு காலை 6.15 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றடைந்து, உடல்களை மீட்கத் தொடங்கியதாகக் கூறினாா். கருகிப்போன கட்டிடத்தின் உள்ளே இருந்த காட்சிகளை அவா் பயங்கரமானவை என்று விவரித்தாா். ஒவ்வொரு தளமும் முற்றிலுமாக எரிந்துவிட்டது, எங்கள் குழு இரண்டாவது தளத்தை அடைந்தபோது, மேலும் பல பாதிக்கப்பட்டவா்களின் கருகிய சடலங்களைக் கண்டோம். சடலங்கள் மிகவும் மோசமாக எரிந்திருந்ததால் அவா்களின் அடையாளத்தைக் கண்டறிவது கடினமாக இருந்தது என்றும் அவா் கூறினாா்.

மீட்புப் பணி சுமாா் இரண்டரை மணி நேரம் நீடித்ததாக சேவா தள் மீட்புக் குழு கூறியது.