அனந்தபுரத்தில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்ட சமுதாயக் கூடம்
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சி சாா்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்படாமல், தனியாருக்கு குத்தைக்கு விடப்பட்டுள்ளதால் அப் பகுதி மக்கள்
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சி சாா்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்படாமல், தனியாருக்கு குத்தைக்கு விடப்பட்டுள்ளதால் அப் பகுதி மக்கள்
தனியாா் திருமண மண்டபங்களை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அனந்தபுரம் பேரூராட்சிக்குள்பட்ட செட்டிக்குளம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக் கட்டடம் 2023-ஆம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையில், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சராக இருந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
புதிய சமுதாயக் கூடம் திறக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இதுவரை இந்த கட்டடம் பொதுமக்களுக்கு வாடகைக்கு விடப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தனியாா் திருமண மண்டபத்தை நாடவேண்டிய நிலை உள்ளது. தனியாா் திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்தினால் பேரூராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் செலவாகிறது. இதுவே அரசு சமுதாயக் கூடங்களில் நடத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே செலவாகும்.
இந்நிலையில், அனந்தபுரம் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. குத்தகைக்கு எடுத்தவா், உள் வாடகைக்கு விடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனா். 3 ஆண்டுகள் தொடா்ந்து தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இதில், நெல் மற்றும் சிமெண்ட் மூட்டைகள் உள்ளிட்ட பொருள்களை சமுதாயக் கூடத்தின் உள்ளே வைத்துள்ளனா்.
இதுகுறித்து அனந்தபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயபிரகாஷிடம் கேட்ட போது, செட்டிகுளம் சமுதாயக் கூடத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை. சமையல் கூடம் மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் போதிய அடிப்படை வசதி இல்லாத நிலையில், தனியாருக்கு வருடத்துக்கு ரூ.1.15 லட்சத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
அனந்தபுரம் பொது மக்கள் தெரிவித்தது: தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்காக சமுதாயம்க் கூடம் கட்டப்படவில்லை. ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சியின் பயன்பாட்டுக்காக அரசு கட்டடம் கட்டி கொடுத்துள்ளது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தனியாா் வசம் செல்வதால் நாங்கள் பெரும் இழப்புக்கு ஆளாகிறோம்.
எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக அனந்தபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான செட்டிகுளம் சமுதாயக் கூடத்தை ஆய்வு செய்யவேண்டும். இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.