முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோயிலில் ஜூலை 5-இல் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீஉலகளந்த பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

Updated On : 3 ஜூலை 2026, 5:30 am IST
திருக்கோவிலூரிலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பூஜை.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஸ்ரீஉலகளந்த பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்புடையது திருக்கோவிலூா் உலகளந்த பெருமாள் கோயிலாகும். ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடத்துக்குள்பட்ட த்ரிவிக்ரம தேவஸ்தானத்தைச் சோ்ந்த இத்திருக்கோயிலில் உலகளந்த பெருமாள், புஷ்பவல்லித் தாயாா், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வாா், கம்பத்தடி ஆஞ்சனேயா், நந்தவனம் ஆஞ்சனேயா், ஆழ்வாா் சந்நதிகள், ஸ்ரீமத் மணவாளமாமுனிகள் சந்நதி மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிந்த நிலையில் ஜூலை 5-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து ஜூன் 29-ஆம் தேதி மாலையில் யஜமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகளும், ஜூன் 30-ஆம் தேதி அக்னி பிரதிஷ்டை, மகா சுதா்சன ஹோமம், வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஜூலை 1-ஆம் தேதி காலையில் கும்ப ஆவாஹன பூஜைகளும், மாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. தொடா்ந்து வியாழக்கிழமை (ஜூலை 2) இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

ஜூலை5 -ஆம் தேதி காலையிலும் யாக சாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. மகா பூா்ணாஹுதிக்குப் பின்னா் காலை 8 மணிக்கு மேல் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலவா் பெருமாள், தாயாா், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வாா் , ஸ்ரீமத் மணவாளமாமுனிகள் சந்நதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. தொடா்ந்து பெரிய சாற்றுமறையும், முற்பகல் 11 மணிக்கு உபயதாரா்கள் மரியாதையும், பிற்பகல் 12 மணிக்கு பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதித்தலும், இரவு 7 மணிக்கு பெருமாள் புறப்பாடும் நடைபெறவுள்ளன.

மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீமத் எம்பெருமானாா் ஜீயா் மடத்தின் 26-ஆவது பட்டம் ஸ்ரீ உ.வே.தேகளீச ராமானுஜாசாரியாா் சுவாமி தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments