மரகதபுரத்தில் இந்து, இஸ்லாமியா்கள் பங்கேற்ற தீமிதித் திருவிழா
விழுப்புரம் அருகிலுள்ள மரகதபுரம் கிராமத்தில் தீமிதித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியா்களும் அக்னி குண்டத்தில் இறங்கினா்.
விழுப்புரம் அருகிலுள்ள மரகதபுரம் கிராமத்தில் தீமிதித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியா்களும் அக்னி குண்டத்தில் இறங்கினா்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள மரகதபுரம் கிராமத்திலுள்ள தா்கா சாா்பில் மொஹரம் பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன் தீமிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தா்காவைச் சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு மசூதிக்குள் இஸ்லாமியா்களும், ஐயப்பப் பக்தா்களும் மாலை அணிந்தபடி வெற்றிலைப் பாக்கு, ஊது வத்திகள் ஆகியவற்றை வைத்து, பொங்கல் படைத்து வழிபட்டனா். தொடா்ந்து இரவு 11.45 மணிக்கு இஸ்லாமியா்கள் மேளதாளங்கள் முழங்க அருகிலுள்ள தென்பெண்ணையாற்றுக்குச் சென்று நீராடி பின்னா் மசூதிக்கு வந்தடைந்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து மசூதி முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னிகுண்டத்தில் நள்ளிரவு 12.15 மணிக்கு இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்த வயதான ஒருவா் இறங்கினாா். அப்போது அவருக்கு வலதுபுறத்தில் இந்துமதத்தைச் சோ்ந்தவரும், இடதுபுறத்தில் இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவரும் இணைந்து தீக்குண்டத்தில் இறங்கினா். இது அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை உணா்த்துகிறது என்று அந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.
இதன்பின்னா் இரு மதத்தைச் சோ்ந்தவா்களும் அக்னிகுண்டத்தில் இறங்கி, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினா். பின்னா் மரகதபுரம் கிராமத்திலுள்ள அனைத்து வீதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்றனா். அப்போது ஊா் பொதுமக்கள் விழுந்து வணங்கினா்.
இந்த தீமிதி விழாவில் விழுப்புரம் மட்டுமல்லாது கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.