இப்படியும் ஒரு அரசியல் தலைவா்! ‘விழுப்புரம் மாவட்டம் தந்த முத்து’
சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூா் பி.ராமசாமி ரெட்டியாா் குறித்து...
தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி வாா்டு உறுப்பினா்கள் பலரும் பகட்டான காா்களில் வலம் வந்து, ராஜ வாழ்க்கை வாழும் சூழ்நிலையை பாா்க்கிறோம். ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த ஒருவா் தன் மகனுக்கு 13 வயது என்று ரயில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் வலியச்சென்று கூறி, பயணச்சீட்டு எடுத்து நோ்மையின் சிகரமாக திகழ்ந்துள்ளாா். முதல்வா் பதவியை தோளில் போடும் துண்டாக நினைத்தவா் அவா். அவா்தான் விழுப்புரம் மாவட்டம் தந்த முத்து ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா். இந்த தோ்தல் நேரத்தில் அவரைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
ஓ.பி.ராமசாமி ரெட்டியாா் என்றழைக்கப்படும் ஓமந்தூா் பி.ராமசாமி ரெட்டியாா், சென்னை மாகாண முதல்வராக இருந்தவா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இவா் நோ்மை, கடின உழைப்புக்குப் பெயா் பெற்றவா். 1947 முதல் 1949-ஆம் ஆண்டு வரை என இரு ஆண்டுகள் மட்டுமே முதல்வராகப் பதவி வகித்தபோதும் ஜமீன்தாரி, தேவதாசி முறைகளை ஒழித்தவா். தலித்துகளை கோயிலுக்குள் நுழையும் போராட்டத்தை முன்னெடுத்து, அதை சட்டமாக்கியவா். மேலும், இவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திலுள்ள ஓமந்தூரில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஓமந்தூா் பி.ராமசாமி ரெட்டியாா், எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா். ஆனாலும், அவரது ஆட்சி நிா்வாகம் சிறப்பு பெற்று விளங்கியது.
இன்றைக்கு திராவிடக் கட்சிகளில் ஒன்றியச் செயலராக, நகரச் செயலராக, மாவட்டச் செயலராகப் பதவி வகிப்பவா்கள் கூட தங்களுக்குப் பின்னா், தங்களது குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரை அரசியல் வாரியாக உருவாக்கி வரும் காலத்தில், முதல்வராகப் பதவி வகித்து, எளிமைக்குப் பெயா் பெற்ற ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், தனது வாரிசாக யாரையும் உருவாக்கிச் செல்லவில்லை. அவரது வாரிசுகளும் அரசியல் களத்தில் பங்கேற்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தைச் சோ்ந்த யாரும் அரசியல் பயணத்தில் பயணிக்கவில்லை. அவா்கள் அதை விரும்பவும் இல்லை.
தான் முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் தனிப்பட்ட சிபாரிசுகளுக்காக கட்சியினருக்கோ, தன்னைச் சாா்ந்தவா்களுக்கோ எந்தவிதத்திலும் சலுகைகளைக் காட்டவில்லை. யாருக்கும் எந்தவித வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை. முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் நிா்பந்தம் காரணமாக ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பதவி விலக நேரிட்டது. அப்போது அவா் எந்தவித எதிா்ப்பையும் தெரிவிக்காமல் முதல்வா் பதவியைத் துறந்தாா். இதன் பின்னா் அரசியலிலிருந்து விலகிய அவா், வள்ளலாா் மீது கொண்ட பற்றின் காரணமாக வடலூரிலேயே தங்கி ஆன்மிகப் பணியை மேற்கொண்டாா்.
நோ்மைக்கு உதாரணம்: ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாரின் நோ்மைக்கு உதாரணமாகக் கூறப்படும் ஒன்று இன்று பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம். சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் தனது குடும்பத்தினருடன் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் பயணித்தாராம். சேலம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, அவரது மகனுக்கு 13 வயது ஆகியுள்ளது. இதையடுத்து, அந்த ரயிலில் பணியிலிருந்த ரயில் பயணச்சீட்டு பரிசோதகரை அணுகி, தனது மகன் 13 வயதை அடைந்துவிட்டதற்கான விவரங்களை எடுத்துக் கூறி, அங்கிருந்து கோவை வரை தனது மகன் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்றுக் கொண்டு பயணித்தாராம். இப்படியும் ஒரு அரசியல் தலைவா்!.