முதல்வரின் ஜோதிடருக்கு அரசுப் பதவி! அறிவியல் இயக்கம் கண்டனம்!
முதல்வரின் ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியதற்கு கண்டனம்...
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் ஜோதிடரும் தவெகவின் செய்தித் தொடர்பாளருமான ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனத்தை பதிவிட்டு வருவதுடன், அரசாணையைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலர் முகமது பாதுசா வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழக அரசின் முக்கிய நிர்வாக அமைப்பில், முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் ஜோதிடராக இருந்து வரும் தனி நபருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன. தனிப்பட்ட நம்பிக்கைகள் என்பது ஒருவரின் உரிமை. அந்த நம்பிக்கைகளை அரசின் அதிகாரப்பூர்வ நிர்வாகத் தளத்திற்கும், மக்களின் வரிப்பணத்தால் இயங்கும் அரசுப் பதவிக்கும் கொண்டு வருவது என்பது முற்றிலும் ஆபத்தான செயல்.
இந்திய அரசியல் சாசனத்தின் 51கி(லீ) சரத்து, ஒவ்வொரு குடிமகனும் "அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஆய்ந்து தெளியும் சிந்தனை மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்” என்பதை அடிப்படை கடமையாக வலியுறுத்துகிறது.
அதேபோல், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் பகுத்தறிவு, அரசியல் சாசன நெறிமுறைகள், அறிவியல் அடிப்படைகள் மற்றும் பொது நலன் ஆகியவற்றின் மீது அமைய வேண்டும் என்பது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை பண்புக் கூறாகும்.
இந்நிலையில், அறிவியல் ஆதாரமற்ற ஜோதிட நம்பிக்கைகளை முன்னிறுத்தும் ஒருவருக்கு அரசுப் பதவி வழங்கப்படுவது, அரசியல் சாசனத்தின் அறிவியல் மனப்பான்மை குறித்த அடிப்படை நோக்கத்திற்கே நேர்மாறானதாகும். இது ஒரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பத்தை அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பின் மீது திணிக்கும் செயல். மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரவேண்டிய காலத்தில் இப்படி ஒரு ஜோதிடரை அரசு பொறுப்பில் நியமிப்பதை கண்டிக்கிறோம்.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் அரசுப் பதவி என்பது திறமை, நிர்வாகத் திறன், சமூகப் பொறுப்ட மற்றும் அரசியல் சாசனப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டியது. ஜோதிடம் போன்ற அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருவர் அரசின் அதிகார அமைப்பில் இடம்பிடிப்பது, அறிவியல் கல்வி, பகுத்தறிவு மற்றும் நவீன ஜனநாயக ஆட்சிமுறைக்கு எதிரான தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்.
தமிழகம் என்பது பெரியார், சிங்கார வேலர், அண்ணா, கலைஞர் போன்றோர் பகுத்தறிவு, சமூகநீதி மற்றும் அறிவியல் சிந்தனையை மக்களிடையே வலியுறுத்திய மண். அத்தகைய தமிழகத்தில், அரசின் நிர்வாகத் தளத்தில் ஜோதிட நம்பிக்கைகளுக்கு அதிகாரபூர்வ இடமளிப்பது, சமூகத்தில் மூடநம்பிக்கைகளை வலுப்படுத்தும் அபாயகரமான நடவடிக்கையாகும்.
தந்தை பெரியார் சிலையை தனது கட்சி அலுவலகத்தில் வைத்துள்ள முதல்வர் அதனை பொருளற்றதா மாற்றிவிட்டார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது
இன்று மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய அவசியம் மிக அதிகமாக உள்ளது. காலநிலை மாற்றம், பொது சுகாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற மிகப்பெரிய சவால்களை அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையால் மட்டுமே சமாளிக்க முடியும்.
இத்தகைய காலகட்டத்தில், அரசே ஜோதிட நம்பிக்கைகளுக்கு அதிகார அங்கீகாரம் அளிப்பது மிகவும் கவலைக்குரியது. எனவே, இந்த நியமனத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறைகளில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.