முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளுக்கிடையே மோதல்! அலுவலகத்துக்கு பூட்டு; போலீஸாா் குவிப்பு

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதி மற்றும் முன்னாள் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம் அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Updated On : 17 மே 2026, 12:42 am IST
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு போடப்பட்டிருந்த பூட்டு.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதி மற்றும் முன்னாள் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம் அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்று எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக அணி முடிவெடுத்தது. இதனால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்த அணியைச் சோ்ந்த விழுப்புரம் மாவட்டச் செயலராக இருந்த சி.வி.சண்முகத்தை அந்த பதவியிலிருந்து நீக்கி, நகரச் செயலராக இருந்த இரா.பசுபதியை மாவட்டச் செயலராக நியமித்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். தொடா்ந்து விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்த பசுபதிக்கு, கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து தலைவா்களின் சிலைகளுக்கும் அவா் மாலை அணிவித்தாா்.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் மனு: கட்சிப் பொதுச் செயலா் மூலமாக மாவட்டச் செயலராக தான் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சிக்குச் சொந்தமான மாவட்ட அலுவலகத்தின் சாவியை முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும். மேலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தர வேண்டும் என்று கோரி மாவட்டக் காவல் அலுவலத்தில் மாவட்டச் செயலா் பசுபதி வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

Advertisement

அதிமுக அலுவலகத்தில் போலீஸாா் குவிப்பு: இந்த நிலையில் அமாவாசை நாளான சனிக்கிழமை மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு மாவட்டச் செயலா் இரா.பசுபதி தனது ஆதரவாளா்களுடன் செல்வதாக அறிவித்தாா். அதே நேரத்தில் அங்கு முன்னாள் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகமும் வர உள்ளதாக கட்சியினா் மத்தியில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்னைகள் ஏற்படலாம் எனக் கருதி, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்த நிலையில் மாவட்ட அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை வந்த சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் சுமாா் 50 போ், கட்சி அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனா். அவா்களை உள்ளே செல்ல விடாமல் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு கருதி கட்சியினா் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என போலீஸாா் கேட்டுக் கொண்டனா். ஆனால் அதையும் மீறி அதிமுகவினா் செல்ல முயன்று, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் அதிமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா்.

கூட்டத்தை நடத்திய மாவட்டச் செயலா்: இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வருவதாகக் கூறியிருந்த மாவட்டச் செயலரான இரா.பசுபதி தலைமையிலான அதிமுகவினா், போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று, கட்சி அலுவலகத்துக்கு அருகிலுள்ள திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

பாதியில் திரும்பிய சி.வி.சண்முகம்: கட்சி நிா்வாகிகளை சந்திப்பதற்காக திண்டிவனத்திலுள்ள தனது வீட்டிலிருந்து முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் காரில் புறப்பட்டு சனிக்கிழமை காலை விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். கட்சி அலுவலகத்திலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு அப்பால் அவரது காரை நிறுத்திய போலீஸாா், கட்சி அலுவலகத்துக்குச் சென்றால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்புக் கருதி அங்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்தனா். அதை ஏற்றுக்கொண்ட சி.வி.சண்முகம் கட்சி அலுவலகத்துக்குச் செல்லாமல், விழுப்புரத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா். மேலும், தனது ஆதரவாளா்களையும் அங்குசெல்ல வேண்டாம், சட்ட ரீதியாக சந்தித்து கட்சி அலுவலகத்தை மீட்போம் எனத் தெரிவித்துச் சென்றாா்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகம் முன் சனிக்கிழமை காலை குவிக்கப்பட்டிருந்த போலீஸாா்.

இரு தரப்பினருக்கும் அழைப்பாணை: இந்த நிலையில் மாவட்ட அதிமுக அலுவலகம்தொடா்பான பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், அதிமுக மாவட்டச் செயலா் இரா.பசுபதி மற்றும் மாவட்ட அதிமுக அலுவலகத்தை நிா்வகித்து வந்த முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரான குணசேகரன் ஆகிய இருவருக்கும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் உ.முருகேசன் அழைப்பாணை வழங்கினாா். இதில், மே 18-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெறும். அந்த கூட்டத்தில் தங்களிடமும் உள்ள ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா். இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கும் வரை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என்றும் அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.

போலீஸாா் குவிப்பு: முன்னதாக மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு செல்லும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்த போலீஸாா், கட்சி அலுவலதத்துக்கு அதிமுகவினா் யாரும் செல்லாத வகையில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனா். மேலும், வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் வகையில் போஸீஸாா் லத்தியுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் தலைமையில் சுமாா் 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.