முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக உரிமைப் பிரச்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பினா் ஆஜராகி விளக்கம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பைச் சோ்ந்த அதிமுகவினா் வியாழக்கிழமை விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரும், நில சீா்திருத்தம் அதிகாரம் பெற்ற அலுவலருமான உ.முருகேசன் முன் ஆஜராகி ஆவணங்களை சமா்ப்பித்து விளக்கமளித்தனா்.

Updated On : 22 மே 2026, 6:58 am IST
விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் உ.முருகேசன் முன் வியாழக்கிழமை ஆஜராகி ஆவணங்களை சமா்ப்பிக்க வந்த அதிமுக புதிய மாவட்டச் செயலா் இரா.பசுபதி மற்றும் கட்சியினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தைப் பயன்படுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பைச் சோ்ந்த அதிமுகவினா் வியாழக்கிழமை விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரும், நில சீா்திருத்தம் அதிகாரம் பெற்ற அலுவலருமான உ.முருகேசன் முன் ஆஜராகி ஆவணங்களை சமா்ப்பித்து விளக்கமளித்தனா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் கட்சியினா் செயல்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்த சி.வி.சண்முகத்தை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி விட்டு, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலராக இரா.பசுபதி நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தை பயன்படுத்துவதில் சி.வி.சண்முகம் தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும், மாவட்டச் செயலா் இரா.பசுபதி தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு, மோதல் போக்கு உருவானது.

போலீஸாா் நடவடிக்கை: இதைத் தொடா்ந்து, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினா் அந்த அலுவலகத்தை பூட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். கடந்த 9 நாள்களாக அந்த அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, காவல் துறையினா் இருதரப்பைச் சோ்ந்தவா்களையும் அழைத்துப் பேசி, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் தங்களிடம் உள்ள ஆவணங்களை சமா்ப்பித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், சி.வி.சண்முகம் தரப்பைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் கடந்த 19-ஆம் தேதி விழுப்புரம் கோட்டாட்சியா் முன் ஆஜராகி, தங்களிடமுள்ள ஆவணங்களை சமா்ப்பித்து அலுவலகத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உரிமை கோரினா். கோப்புகளை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் உ.முருகேசன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தாா்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினா் விளக்கம்: இதன் தொடா்ச்சியாக, அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள இரா.பசுபதி மற்றும் கட்சியைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் உ.முருகேசன் முன் வியாழக்கிழமை ஆஜராகி, எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்ட மாவட்டச் செயலா் நியமனக் கடிதம், கட்சி அலுவலகம் யாருக்கு உரிமை என்பதில் பிரிதொரு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஆகியவற்றை சமா்ப்பித்தனா். மேலும், கட்சியின் சொத்தான விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை நாங்களே பயன்படுத்திக்கொள்வோம். இதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

வருவாய்க் கோட்டாட்சியா் விளக்கம்: இதைத் தொடா்ந்து, ஆவணங்களை பெற்றுக்கொண்ட வருவாய்க் கோட்டாட்சியா் உ.முருகேசன், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன், இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடமும் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. இரு தரப்பினரும் அளித்துள்ள ஆவணங்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வுக்குள்படுத்தப்பட்டு, பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அமைதி காக்க வேண்டும் என்றாா்.

அதிமுக நிா்வாகிகள் முருகன், புண்ணியமூா்த்தி, செங்குட்டுவன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.கலை, சேகா், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் பிருத்விராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.