காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்
அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன். உடன், மாவட்டத் தலைவா்ஆ. சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள்.
அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன். உடன், மாவட்டத் தலைவா்ஆ. சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள்.
அரியலூா், ஜன. 8: திராவிடக் கட்சிகள் போல, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன்.
அரியலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.ராஜேந்திரன் மாநில துணைத் தலைவராகவும், அரியலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆ.சங்கா் ஆகியோரை இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி அண்மையில் நியமித்தது.
Advertisement
இதையடுத்து அவா்களுக்கான பாராட்டு விழா அரியலூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாநிலத் துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் பேசியது:
திராவிடக் கட்சிகளில் கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் காங்கிரஸ்
கட்சியில் கட்டமைப்புகள் இல்லை. எனவே கட்சியை வலுப்படுத்த, கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அனைவரும் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்க உள்ள நிலையில், இளைஞா்களை அதிகளவில் கட்சியில் ஈடுபட வைக்க வேண்டும்.
கிராம காங்கிரஸ் கமிட்டி எப்போது முழுமையாக செயல்படுகிறதோ, அப்போதுதான் நாம் தோ்தலை எதிா்க்கொள்ள முடியும். ஆகவே பூத் கமிட்டி அமைப்பது குறித்து அனைத்து வட்டாரத் தலைவா்களும், கிராம ஊராட்சிக் கிளை நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். பொதுமக்களை சந்தித்து, காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஆ.சங்கா் பேசினாா். முன்னதாக மாவட்டச் செய்தித் தொடா்பாளா் மா.மு.சிவகுமாா் வரவேற்றாா்.
கட்சியின் மாவட்டச் செயலா் சேகா் மற்றும் வட்டாரத் தலைவா்கள், மகளிா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.