வர்த்தகம்

ஆறாவது வாரமாக பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம்

DIN

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து ஆறாவது வாரமாக காளையின் ஆதிக்கத்துடன் காணப்பட்டது. 
இதையடுத்து, சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டெண்கள் புதுப்புது உச்சங்களைத் தொட்டு சாதனை படைத்தன. 
மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு, உள்நாட்டில் நிதிப் புழக்கம் அதிகரிப்பு ஆகியவற்றால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடனேயே காணப்பட்டது. 
சர்வதேச நிகழ்வுகளைப் பொருத்தவரையில், ஹெச்1பி விவகாரத்தில் அமெரிக்கா எந்த பாதகமான முடிவுகளையும் எடுக்காதது இந்திய பங்குச் சந்தைகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களில் இது எதிரொலித்தது.
இருப்பினும், பொருளாதார வளர்ச்சி குறித்த மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் பின்னோக்கிய மதிப்பீடு, டிசிஎஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது உள்ளிட்டவை முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை குறைத்தது.
முதலீட்டாளர்களிடம் கிடைத்த அதீத வரவேற்பால் ரியல் எஸ்டேட் தொழில் துறை குறியீட்டெண் 5.51 சதவீதமும், தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 4.50 சதவீதமும் ஏற்றம் கண்டது. 
இவை தவிர, தொழில்நுட்பம் 2.88 சதவீதமும், ஐபிஓ 2.54 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 1.26 சதவீதமும், உலோகம் 1.25 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 0.96 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 0.80 சதவீதமும், வங்கி 0.56 சதவீதமும், மருந்து 0.38 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.11 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், மின்சார உற்பத்தி தொழில் துறை குறியீட்டெண் 0.84 சதவீதமும், மோட்டார் வாகனம் 0.24 சதவீதமும் சரிந்தது.
சென்ற வாரத்தில் சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் காணப்பட்டது.
நிலக்கரி விலையை மாற்றியமைக்க நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் தெரிவித்ததையடுத்து பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா பங்கின் விலை அதிகபட்சமாக 10.49 சதவீதம் உயர்ந்து ரூ.308ஆனது.
மூன்றாம் காலாண்டு நிகர லாபம் கணிசமாக அதிகரித்ததையடுத்து இன்ஃபோசிஸ் பங்கின் விலை 6.55 சதவீதமும், விப்ரோ 2.91 சதவீதமும், ரிலையன்ஸ் 2.57 சதவீதமும், யெஸ் வங்கி 2.28 சதவீதமும், ஐடிசி 1.75 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 1.60 சதவீதமும் உயர்ந்தன.
இருப்பினும், லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதால் பார்தி ஏர்டெல் பங்கின் விலை 5.67 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.509.40ஆனது. 
இதைத் தொடர்ந்து, பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 3.13 சதவீதமும், என்டிபிசி 3.02 சதவீதமும், பவர் கிரிட் 2.19 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 1.61 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 1.35 சதவீதமும் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 438 புள்ளிகள் அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக 34,592 புள்ளிகளில் நிலைத்தது. 
(முந்தைய ஐந்து வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 1,681 புள்ளிகள் (5.12%) அதிகரித்தது குறிப்பிடத்தக்கது).
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.27,137.55 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 122 புள்ளிகள் உயர்ந்து 10,681 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,84,611.77 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
சாதகமான நிலவரங்களால் தினம்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் பங்குச் சந்தைகளின் சாதனைகள் வரும் வாரத்திலும் தொடரும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT