முகப்பு
சென்னை

நகைக் கடையில் 255 பவுன் நூதனத் திருட்டு: 3 ஊழியர்கள் கைது

அடையாறில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் 255 பவுன் நகைகளை நூதனமாகத் திருடியதாக அந்தக் கடையின் ஊழியர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 12 ஆகஸ்ட், 2013 at 4:33 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

அடையாறில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் 255 பவுன் நகைகளை நூதனமாகத் திருடியதாக அந்தக் கடையின் ஊழியர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடையாறு, சர்தார் படேல் சாலையைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர் அதே பகுதியில் எஸ்.ஆர்.எஸ். ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை வைத்துள்ளார்.

இந்தக் கடையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜன் (40) என்பவர் நகை இருப்பு பொறுப்பாளராக (ஸ்டாக் இன்-சார்ஜ்) பணியாற்றி வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆனந்தராஜன் மற்றும் அந்தக் கடையின் ஊழியர்கள் ஜானகிராமன் (54), பிரகாசம் (60) ஆகியோர் முன் அறிவிப்பின்றி வேலையை விட்டு நின்றதாகத் தெரிகிறது.

மேலும் அவர்கள் பணிபுரிந்த சமயத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் 255 பவுன் நகைகளை நூதன முறையில் திருடியிருப்பது தெரிய வந்துள்ளது.

கடையில் உள்ள நகைகளின் விவரங்கள் மற்றும் இருப்பை கணிணியில் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கம்.

ஸ்டாக் இன்-சார்ஜாக பணியாற்றிய ஆனந்தராஜன் உள்ளிட்ட மூவரும் ஒரு மென்பொருளை (சாஃப்ட் வேர்) பயன்படுத்தி நகைகளின் இருப்பு குறித்த தகவலை கணிணியில் இருந்து அழித்துவிடுவார்களாம்.

அதன் பிறகு தகவல்கள் அழிக்கப்பட்ட நகைகளை அவர்கள் திருடிவந்ததாகத் தெரிகிறது. தகவல்கள் அழிக்கப்பட்டதால் நகைகளின் இருப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றில் வித்தியாசம் வரவில்லை. இதனால் அவர்கள் மீது சந்தேகம் யாருக்கும் வரவில்லை.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நகைகளின் இருப்பு குறித்த கையேட்டுப் பிரதிக்கும், கணிணித் தகவல்களுக்கும் இடையே வித்தியாசம் வரவே, கடையின் உரிமையாளர் ரவி ரத்தினத்துக்கு ஆனந்தராஜன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதைத் தெரிந்து கொண்ட ஆனந்தராஜனும் அவரது கூட்டாளிகளும் திடீரென வேலையை விட்டு நின்று விட்டனர்.

இதையடுத்து நகை இருப்பு குறித்த பழைய தகவல்களை ஆய்வு செய்த போது, கடையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயிருப்பது தெரிய வநதுள்ளது.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்தராஜன், ஜானகிராமன் மற்றும் பிரகாசம் ஆகியோரைக் தனிப்படை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தற்போது அவர்கள் மூவரும் நீதி மன்றக் காவலில் உள்ளதாகவும், அவர்களிடமிருந்து 2 கிலோ தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.